இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், இந்த ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சு நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை தொடர வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என்றும் கண்டலீசா ரைஸ் கூறியதாக அமெரிக்க அயலுறவு செய்தி தொடர்பாளர் ஷான் மெக்கார்மக் தெரிவித்தார்.
இந்தியாவில் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கண்டலீசா ரைஸ் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கிறாரா? என்று மெக்கார்மக்கிடம் கேட்கப்பட்டது.
அதற்கு, அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் ரைஸ் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார் என்றும், இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடைகாண வேண்டியது அவர்களை பொருத்தப் பிரச்சனை. ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டுமா? வேண்டாமா? என்பதையும் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை தாமதிக்காமல் எடுக்க வேண்டும் என்று இந்திய அரசை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தும். அதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்யும் என்றும் மெக்கார்மக் குறிப்பிட்டார்.