பாகிஸ்தான் இடைக்கால அரசில் ராணுவத்திற்கு இடமில்லை!
Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2007 (12:15 IST)
பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்கு முன்பு அமையவுள்ள இடைக்கால அரசில் முன்னாள் ராணுவ அதிகாரிகளின் பங்கேற்பு இருக்காது என்ற அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ராணுவத்தினர், உளவுத்துறையினர் ஆகியோர் வருகின்ற பொதுத் தேர்தலில் தலையிடக்கூடாது என்று அவர்களுக்கு உத்தரவுகள் அனுப்பப்படும். இதற்கான முடிவுகளை மத்திய அமைச்சரவை, மாநிலங்களின் அமைச்சரவைகள் எடுத்துள்ளன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தேதியை அதிபர் பர்வேஷ் முஷாரஃப் நவம்பர் இரண்டாவது வாரத்தில் அறிவிக்க உள்ளார்.
அதேநேரத்தில், இடைக்கால அரசின் பிரதமராக நியமிக்கப்பட உள்ளவரின் பெயரையும் அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் , நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் தேர்தல் அட்டவணையை வெளியிட உள்ளது.
நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் ஆகியவற்றுக்கான வாக்குப்பதிவு ஒரேநாளில் நடைபெறும். அது அனேகமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் அமையலாம் என்று அந்நாட்டு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வேட்பாளர்களையோ, அரசியல் தலைவர்களையோ அதிகாரபூர்வமாக எந்தத் தேவைக்கும் அணுகக் கூடாது என்று உளவுத்துறை நிறுவனங்களை அதிபர் முஷாரஃப் கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டம்- ஒழுங்கு, பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், தேர்தலை முன்னிட்டு நிலைமைகளை ஆராய்வதற்கும், தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் அதிபர் முஷாரஃப் தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர், அரசுத் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் உள்ளனர்.
பொதுத் தேர்தலைக் கண்காணிக்க சர்வதேச அளவிலான கண்காணிப்பாளர்களை அனுமதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. சர்வதேச ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.