பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் 15 ராணுவத்தினரை கடத்திச் சென்று தலை துண்டித்து கொலை செய்தனர்.
பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள வாசிர்ஸ்தான் மாகாணத்தில் தலிபான், அல்கொய்தா தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இந்த பகுதிகளில் தீவிரவாதிகளை ஒடுக்க நூற்றுக்கணக்கில் ராணுவத்தினரை பாகிஸ்தான் அரசு அனுப்பி வருகிறது.
இந்த ராணுவத்தினரில் சிலரை தீவிரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் கடத்திச் சென்றனர். இதே போல சவாத் மாவட்டத்தில் மினி பஸ்சில் சென்று கொண்டிருந்த ராணுவத்தினரை தீவிரவாதிகள் கடத்துச் சென்றனர்.
கடத்தப்பட்ட அந்த ராணுவத்தினரின் தலையை துண்டித்த தீவிரவாதிகள், உடல்களை எறிந்து விட்டு சென்று விட்டனர். இதில் 4 உடல்களை ராணுவத்தினர் மீட்டனர்.
இதே போல் இன்னொரு பகுதியில் 7 ராணுவத்தினரை தீவிரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்தனர். மிங்கோரா பகுதியில் 4 ராணு வத்தினரை கடத்தி கொலை செய்த தீவிரவாதிகள் அந்த உடல்களை கயிற்றில் கட்டி தெருத் தெருவாக இழுத்து வந்தனர். நேற்று மட்டும் 15 ராணுவத்தினரை தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்துள்ளனர்.
இன்னும் 20-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளனர். இவர்களின் நிலைமை என்ன ஆகுமோ என்று தெரியவில்லை.