கூட்டுப் பணிக் குழு பரிந்துரைப்படி எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு: பிரணாப் முகர்ஜி!
இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான நெறிமுறைகளை ஆய்ந்து வகுக்க நியமிக்கப்பட்டுள்ள கூட்டுப் பணிக் குழு வின் பரிந்துரைப்படி இறுதித் தீர்வு காணப்படும் என்று அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா, ரஷ்ய நாடுகளின் அயலுறவுத் துறை அமைச்சர் மாநாடு சீனாவில் உள்ள ஹர்பின் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி, சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் யங் ஜியெச்சியை சந்தித்து 50 நிமிடங்களுக்கும் மேலாக இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தியா- சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்சனை குறித்து விவாதிக்க சிறப்பு பிரதிநிதிகளை நியமிக்க கடந்த 2003ஆம் ஆண்டு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இது தொடர்பாக 11 முறை சிறப்பு பிரதிநிதிகள் இதுவரை சந்தித்துப் பேசியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 24 முதல் 26ஆம் தேதி வரை சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு பிரதிநிதிகளான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும், சீனா வெளியுறவுத் துறை அமைச்சரான தாய் பிங்குவாவும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு எல்லைப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய இடத்தைப் பெற்றதாக கூறப்படுகிறது.
சீனா அமைச்சருடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, இரு நாடுகளிடையே உள்ள எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண கூட்டுப் பணிக் குழுவை அமைக்க சிறப்பு பிரதிநிதிகள் பங்கேற்ற 11வது சுற்றுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
மேலும் அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்டுள்ள குழு எல்லைப் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பான நெறிமுறைகளை வகுத்து பின்னர் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
இச்சந்திப்பில் இருதரப்பு வணிகத்தை அதிகரிப்பது குறித்தும் பேசியதாக முகர்ஜி மேலும் தெரிவித்தார்.