சார்க் மாநாடு இன்று தொடங்கியது!
Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2007 (17:55 IST)
பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையில் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (SAARC) 15-ஆவது மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆள் கடத்தல், போதைப் பொருள் மற்றும் மருந்து கடத்தல், பயங்கரவாதத் தாக்குதல்கள், திட்டமிடப்பட்ட குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளன.
சார்க் அமைப்பின் புதிய உறுப்பினரான ஆஃப்கானிஸ்தான் முதல் முறையாக இம் மாநாட்டில் பங்கேற்கிறது.
தொடக்க நாளான இன்று தெற்காசிய நாடுகளுக்கு இடையில் காவல்துறை விவகாரங்களில் ஒத்துழைப்பு குறித்த கலந்தாய்வு நடைபெறுகிறது.
பின்னர் சார்க் நாடுகளின் உள்துறை செயலாளர்களின் இரண்டாவது கூட்டம், உள்துறை அமைச்சர்களின் இரண்டாவது கூட்டம் ஆகியவை தனித்தனியாக நடைபெறுகின்றன. இவற்றுக்கு இந்தியா தலைமை ஏற்கும்.
இக்கூட்டங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பாதுகாப்பு நிர்வாகம் தொடர்பான விவாதங்கள் இடம் பெறுகின்றன. அப்போது உயர்மட்டஅளவிலான கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படும்.
இந்த மூன்றுகட்ட மாநாட்டின் அடிப்படைக் கருத்துகளாக பலதரப்பட்ட ஒப்பந்தங்கள், நிறுவனரீதியான ஏற்பாடுகள், தகுதிக் கட்டமைப்பு ஆகியவை அமையும்.
தெற்காசிய நாடுகளிடையில் விசா பரிமாற்றம், குற்றவியல் நடவடிக்கைகளில் சட்ட உதவிகளைப் பெறுவதற்கான புரிந்துணர்வு வரைவறிக்கை, ஆள்கடத்தல், போதைப் பொருள், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், காவல்துறை தலைவர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவை தற்போது முக்கிய விவாதப் பொருட்களாக உள்ளன.
ஹைதராபாத், அஜ்மீர், லூதியானா குண்டுவெடிப்பு நிகழ்வுகள் பற்றிய விவரங்களை இந்தியா எடுத்துரைக்கும் என்று கருதப்படுகிறது.
ஏற்கெனவே நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மண்டல மாநாட்டின் அடிப்படையில், சார்க் பயங்கரவாதக் குற்றங்கள் கண்காணிப்பு அமைப்பு (SAARC Terrorism Offences Monitoring Desk (STOMD) ) ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சார்க் போதைப் பொருள் எதிர்ப்பு மாநாட்டின் அடிப்படையில் சார்க் போதைப் பொருள் குற்றங்கள் கண்காணிப்பு அமைப்பு (SAARC Drug Offences Monitoring Desk - SDOMD) உருவாக்கப்பட்டது. சார்க் அமைப்பில் உள்ள எல்லா நாடுகளும் இவற்றில் பங்கேற்றுள்ளன.
இவற்றின் செயல்பாடுகளும், கடந்த 14-வது சார்க் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய நிலையும் கூடுதலாக விவாதிக்கப்பட உள்ளன.