'தாக்குதல் நடத்தியவர்கள் கோழைகள்' : பெனாசீர்

Webdunia

திங்கள், 22 அக்டோபர் 2007 (15:48 IST)
இருட்டைப் பயன்படுத்தித் தன்னைக் கொல்ல முயன்றவர்கள் கோழைகள் என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோ கூறியுள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த பெனாசீர் புட்டோ கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் திரும்பினார். அன்றிரவு அவரைக் குறிவைத்து நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் 165க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். 450க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

அத்தாக்குதலின்போது தெருவிளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன. பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்காக ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு இதைச் செய்தது என்று பெனாசீர் குற்றம் சாற்றியிருந்தார்.

இந்நிலையில் நேற்று, தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மனைவிகளின் இடையில் பெனாசீர் பேசினார்.

''அமைதி, கல்வி, வேலைவாய்ப்பு, முன்னேற்றம் ஆகியவற்றை விரும்பாதவர்கள்தான் தாக்கியுள்ளனர். மக்கள் அறியாதவர்களாகவும், பின்தங்கியும், வேலையில்லாமலும் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

இருட்டைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியவர்கள் கோழைகள். அவர் வீரமானவர்களாக இருந்தால் பகலில் வரவேண்டும்.

நாங்கள் எங்கள் கைகளில் ஆயுதங்களை ஏந்தியிருக்கவில்லை. ஆனால் நல்ல கொள்கைகளை வைத்துள்ளோம். அதைக்கொண்டு பயங்கரவாதம், வன்முறை, துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடுவோம்.

நாங்கள் ஒன்றாகவே வாழ்வோம், ஒன்றாகவே இறப்போம், ஒன்றாகவே வெற்றி பெறுவோம்'' என்று அவர் பேசினார்.

தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1,00,000 இழப்பீட்டையும் அப்போது அவர் வழங்கினார்.

ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கட்சித் தொண்டர்களைப் பார்வயிட்ட பெனாசீர், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்