மனித குலத்துக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாச வேலைகளுக்கு, கடவுள்களின் பெயரை பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று மதத் தலைவர்களை போப் 16 ஆம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் பொது மக்கள் கூட்டமைப்பான சான் - டி - கிடியோ இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரில் சர்வசமய கலந்தாலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கிறிஸ்துவம், யூதம், இஸ்லாம், புத்த மதம், இந்து மதம் மற்றும் சோராஸ்டெயின்ஸ் ஆகியவற்றின் மதத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தீவிரவாதம், வன்முறை இல்லாத உலகை உருவாக்குவது தொடர்பாக விவாதித்து முடிவு எடுப்பது மையக் கருத்தாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
மதத் தலைவர் மற்றும் அறிஞர் பெருமக்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் நடைபெமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகின்றது.
இந்த மூன்று நாட்கள் மாநாட்டில் உலக கத்தோலிக்க மக்களின் மதத் தலைவராக கருதப்படும் போப் 16ஆம் பெனடிக்ட், பாரம்பரிய ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் ஆன்மீகத் தலைவர் பர்த்தலோமேயூ, கான்டபர்ஃரி ஆர்ச் பிஷப் ரோவன் வில்லியம்ஸ், இஸ்ரேஸ் தலைமை ராஃபி யோனா மெட்ஷிகர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இமாம் இப்ராகிம் எஸ்லாடின் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போது உலகம் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. வன்முறை மற்றும் தீவிரவாத செயல்கள் கடவுள்களின் பெயரால் நியாயப்படுத்தப்படுவதாக தெரிவித்த போப் 16ஆம் பெனடிக்ட், தீவிரவாதத்தின் வாகனமாக மதத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், தங்களின் நாசகார தீவிரவாத செயல்களுக்கு கடவுள்களின் பெயரை பயன்படுத்தி அந்த இயக்கங்கள் தங்களுடைய செயல்களுக்கு நியாயம் கற்பிக்க கூடாது என்றும் கூறினார். இதனை அனுமதிக்க கூடாது என்று அவர் மற்ற மதத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டார்.
எல்லா மதங்களும் மனச் சமாதானத்தை மனிதன் பெற வேண்டும் என்பதை எவ்வாறு அடைய முயற்சிக்க வேண்டும் என போதித்து வரும் நிலையில் வன்முறை வெறியாட்டம், தீவிரவாத செயல்கள் இல்லாத அமைதியான மனித குலத்தை உருவாக்க மதங்களுக்கு அளப்பரிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அதனை முழுமையாக பயன்படுதத அமைதியான மனித குலத்தை உருவாக்க முன் வர வேண்டும் என்று போய் 16ஆம் பெனடிக்ட் மேலும் வலியுறுத்தினார்.
மதங்களுக்கிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழ்நிலையிலும் உலகில் அமைதியை உருவாக்க, அனைத்து தரப்பு மக்களையும ஒருங்கிணைத்து செயல்படத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.