தென் ஆப்பிரிக்கா, பிரேசில் தலைவர்களைச் சந்திக்கிறார் மன்மோகன் சிங்!
Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (15:43 IST)
தென் ஆப்பிரிக்காவில் நாளை நடைபெறவுள்ள மாநாட்டில் பிரேசில், தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களை பிரதமர் மனமோகன் சிங் சந்தித்துப் பேசுகிறார்.
அடுத்த சில ஆண்டுகளில் மூன்று நாடுகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகத்தை ஊக்குவிக்க இந்தச் சந்திப்பு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு 5 நாள் அரசுமுறை பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், நாளை ஜோகனெஸ்பர்க் நகருக்குச் செல்கிறார்.
அங்கு இந்தியா- பிரேசில்- தென் ஆப்பிரிக்கா (IBSA) நாடுகள் அமைப்பின் இரண்டாவது மாநாடு நடக்கிறது. அதில் மன்மோகன்சிங், தென் ஆப்பிரிக்க அதிபர் தாபு பெகி, பிரேசில் அதிபர் லூய்ஸ் இனாசியோ லூலா டா சில்வா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
மூன்று நாடுகளுக்கும் இடையிலான வணிக உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது, உலகளாவிய சிக்கல்களில் நிலையெடுப்பது ஆகியவை தொடர்பான விவாதங்கள் இம்மாநாட்டில் நடைபெறவுள்ளன.
மேலும், பொதுநிர்வாகம், உயர்கல்வி, உடல்நலம், மருத்துவம், சமூக மேம்பாடு, எரிசக்தி, கலாச்சார ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.