அணு சக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் : அமெரிக்கா நம்பிக்கை!

Webdunia

செவ்வாய், 16 அக்டோபர் 2007 (14:16 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இருதரப்பினருக்கும் உகந்த வகையில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடைமுறைக்கு வரும் என்று நம்புவதாக அமெரிக்க அயலுறவு அமைச்சகம் கூறியுள்ளது!

இடதுசாரிகளின் எதிர்ப்பால் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மத்திய அரசு கிடப்பில் போட முடிவெடுத்துள்ளது என்று அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கூறிவரும் நிலையில், அமெரிக்க அயலுறவு அமைச்சகம் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது!

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் துணை பேச்சாளர் டாம் கேசி, அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இரு நாடுகளும் தொடர்ந்து ஈடுபடும் என்றும், குறிப்பிட்ட காலவரையறைக்குள் அது நடைமுறைக்கு வரும் என்றும் கூறினார்.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் குறித்து இந்திய அரசுதான் கூறவேண்டும் என்று கூறிய டாம் கேசி, இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் தொடர்பான எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக, அணு சக்தி உபகரணங்கள் வழங்கு நாடுகள் குழுவுடன் அமெரிக்கா பேசும் என்றும், அதே நேரத்தில் தங்களது அணு உலைகளை கண்காணிப்பது தொடர்பான தனித்த ஒப்பந்தம் குறித்து சர்வதேச அணு சக்தி முகமையுடன் இந்தியாதான் பேசவேண்டும் என்று டாம் கேசி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்