சிறிலங்காவிற்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் லூய்ஸ் ஆர்பரை சந்திக்க வேண்டும் என்று கோரி சிறையில் உண்ணாவிரதமிருந்த தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது!
இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் ஆதரவு இணையதளமான புதினத்தில் தெரிவித்துள்ளதாவது.
சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வெலிக்கடைச் சிறையில் உண்ணாவிரதமிருந்த தமிழ்க் கைதிகள் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் சிறை உயர் அதிகாரி ஒருவர் உண்ணாவிரத்தை உடனடியாகக் கைவிடுமாறும், இல்லையேல் கடுமையான விளைவுகளைச் சந்திப்பீர்கள் என்றும் மிரட்டியுள்ளார். வெலிக்கடைச் சிறையின் "ஜி" பிரிவு கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 86 தமிழ்க் கைதிகள் இன்று காலை 6:00 மணி முதல் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர். மேலும் சிங்களவர்களுடன் சேர்த்து ஏ, பி, சி ஆகிய பிரிவு சிறைக்கூடத்திற்குள் அடைக்கப்பட்டுள்ள 28 கைதிகளும் தத்தம் சிறைக்கூடங்களுக்குள் இருந்தவாறே உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கொழும்பு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர் தமிழ்க் கைதிகளை சிறையில் சந்திக்க வேண்டும், வீண் பழி சுமத்தப்பட்டு தமிழ்க் கைதிகள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகள் ஒரு மனித உரிமை மீறல் என்பதை அரசுக்கும், நீதி அமைச்சகத்திற்கும் எடுத்துக்கூற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.
மொத்தமாக 114 பேர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். இதில் 16 பேர் கண் வலியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
அவர்களில் சிலர் இன்று காலை மருந்து எடுப்பதற்காக சிறைக்கூடத்திற்குள் இருக்கும் மருந்து நிலையத்திற்கு சென்றபோது சிங்களக் கைதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். அப்போது சிறை அலுவலர் ஒருவர் அங்கு இருந்துள்ளார். அவரும் சேர்ந்தே இந்த தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மூலமாக லூய்ஸ் ஆர்பருக்கு சிறைக் கைதிகளின் சார்பில் மனு ஒன்றை அனுப்பி வைக்க முயன்றனர். அதற்கு சிறைக்காவலர்களும் சிறை அதிகாரிகளும் அனுமதி மறுப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனிடையே கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உள்ள 66 தமிழ்க் கைதிகள் நாளை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தினை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.