வன்னிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல்களால் சிறிலங்கா இராணுவப் படையினர் பெரும் இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர் என்று வன்னி மண்டல சிறிலங்கா இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் "த பாட்டம்லைன்" ஆங்கில வார இதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது :
வன்னியில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற மோதல்களில் 2 அதிகாரிகள் உட்பட 8 படையினர் கொல்லப்பட்டதுடன், 22 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் போது விஜயபாகு ரெஜிமென்டின் 6 படைப்பிரிவைச் சேர்ந்த கேப்டன் சொய்சா, 10 ஆவது சிலோன் இலகு காலாட் படையைச் சேர்ந்த கேப்டன் அலகியவத்த ஆகியோர் காணாமல் போயிருந்தனர். பின்னர் அவர்களின் உடல்களை சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக விடுதலைப் புலிகள் கொடுத்தனர்.
படையினரின் திட்டங்களை என்னால் வெளியிட முடியாது. அது மிகவும் இரகசியமாகும். எங்களின் உத்திகளை நாங்கள் நடைமுறைப்படுத்தும் போது விடுதலைப் புலிகளுக்கு அது அதிர்ச்சியாக இருக்கும். எதிர்காலத்திலும் அவர்களுக்குப் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. விடுதலைப் புலிகளை ஓய்வாக இருக்க நாங்கள் விடப்போவதில்லை.
மன்னாருக்கு வடக்குப்புறம், விடத்தல்தீவு, கட்டட்டி, ஏ-32 நெடுஞ்சாலை போன்றவற்றில் உள்ள விடுதலைப் புலிகளின் பலம் தொடர்பாக எங்களுக்குத் துல்லியமான புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே அவர்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்படும்.
படையினர் மீது 122 மி.மீ பீரங்கிகள், 80 மி.மீ, 81 மி.மீ மோட்டார்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்துகின்றனர். விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல்களினால் நாங்கள் கடுமையான இழப்புக்களைச் சந்தித்து வருகிறோம் என்றார் அவர்.