சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூய்ஸ் ஆர்பர் தங்களின் நிர்வாகப் பகுதிக்கும் வர வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி கூறுகையில், சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் லூய்ஸ் ஆர்பரை நாங்கள் வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய மதிப்பீடு செய்ய தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கும் லூய்ஸ் ஆர்பர் வரவேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிறிலங்கா இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட உணர்வுப்பூர்வமான மற்றும் அதிமுக்கியமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் விடுதலைப் புலிகளிடம் உள்ளன.
மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல செய்தியாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மதகுருமார்கள் தாக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசின் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் கூட சிறிலங்கா இராணுவத்தினரால் பயமுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள், அரசு சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள், சுகாதார சேவைப் பணியாளர்கள் ஆகியோரை தங்களின் எறிகணைத் தாக்குதல்கள் மூலம் சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர்.
தொடர்ச்சியான எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களால் படிக்கும் சிறுவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசின் திட்டமிட்ட பொருளாதாரத் தடைகளால் தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பாக லூய்ஸ் ஆர்பர் பார்வையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றார் செல்வி.