உயிரியல் மருத்துவத்திற்கு தங்களது ஆராய்ச்சியின் மூலம் பெருங்காற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த மரியோ ஆர். காபெக்கி, ஆலிபர் ஸ்மித்தீஸ், இங்கிலாந்தின் சர் மார்ட்டின் ஈவான்ஸ் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்!
சுண்டெலிகளில் மரபணு இலக்கு என்றழைக்கப்படும் மிக சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை தாங்கள் மேற்கொண்ட எம்பிரியானிக் ஸ்டெம் செல்ஸ் ஆய்வின் மூலம் மேற்கொண்டு மிகப் பெரிய கண்டுபிடிப்பை இம்மூவரும் செய்துள்ளனர் என்று நோபல் பரிசுக் குழு கூறியுள்ளது.
திசுக்களில் உள்ள தனித்த மரபணுக்களை செயலற்றதாக்கும் அடிப்படையைக் கொண்டது இந்த ஆராய்ச்சியாகும். செல்களை உருவாக்குவது, வளர்ச்சி, வயது முதிர்ச்சி, நோய் ஆகியவற்றில் இப்படிப்பட்ட தனித்த மரபணுக்களை செயலற்றதாக்கும் போது அதன்மூலம் மருத்துவ ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றத்தை உருவாக்கிய மரபணு நாக்அவுட் சோதனைகளை இவர்கள் மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையை அவர்கள் சுண்டெலிகளில் மேற்கொண்டனர். இந்தச் சோதனை டி.என்.ஏ. என்றழைக்கப்படும் மரபணுக்களில் மாற்றங்கள் செய்வதில் மிகப் பெரிய முன்னேற்றத்தை செய்துள்ளது. குறிப்பிட்ட மரபணுவின் செயல்பாட்டை உறுதி செய்து அதன்மூலம் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வாய்ப்பை இவர்களின் ஆராய்ச்சி உருவாக்கியுள்ளது என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.
ஜீன் டார்கெட்டிங் என்றழைக்கப்படும் இப்படிப்பட்ட மரபணு இலக்கு சோதனையின் மூலம் இதயம், மூளை, நீரிழிவு, புற்றுநோய் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிப்பது எளிதாகியுள்ளது என்று நோபல் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை கூறுகிறது.
மரியோ ஆர். காபெக்கி 1937 ஆம் ஆண்டு இத்தாலியின் பிறந்து பின் அமெரிக்காவில் குடியேறியவர். ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் உயிரி இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். தற்பொழுது யூட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஆலிபர் ஸ்மித்தீஸ் 1925 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்து பிறகு அமெரிக்காவில் குடியேறியவர். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலையில் உயிரி வேதியியலில் 1951 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்று வடக்கு கரோலினா பல்கலையில் நோய் கண்டுபிடிப்பு மருத்துவக் கல்வியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
சர் மார்ட்டின் ஈவான்ஸ் 1941ல் இங்கிலாந்தில் பிறந்தவர். மனித உடற்கூறு விஞ்ஞானத்திலும், திசு இயலிலும் 1969 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். தற்பொழுது கார்டிஃப் பல்கலையில் பாலூட்டிகளின் மரபணுவியல் கல்வியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.