9 மாதங்களில் 24,000 வீரர்களைச் சேர்த்த சிறிலங்கா இராணுவம்!

Webdunia

சனி, 29 செப்டம்பர் 2007 (18:43 IST)
சிறிலங்கா இராணுவம் விடுதலைப் புலிகளுடன் நடத்திவரும் தனது போரைத் தொடர்வதற்காக கடந்த 9 மாதங்களில் 24 ஆயிரம் வீரர்களைப் புதிதாகச் சேர்த்துள்ளது!

சிறிலங்காவில் தமிழீழ விடுதலை வேண்டிப் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையில் நடந்து வரும் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் "சிறிலங்கா இராணுவத்தில் சேர இளைஞர்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆண்டு மட்டும் 24 ஆயிரம் வீரர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டு உள்ளனர்" என்று இராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நானயக்கரா கூறியுள்ளர்.

"விடுதலைப் புலிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால் வீரர்கள் முன்னெப்போதையும் விட மிகுந்த மனோதிடத்துடன் உள்ளனர்" என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் முழுவதும் நடந்த போரில் 45 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும், பருவமழை தொடங்கும் முன்பு தாக்குதலைத் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் உதய நானயக்கரா தெரிவித்தார்.

பருவமழை தொடங்கிவிட்டால் பீரங்கிகளைப் பயன்படுத்துவது கடினம் என்று இராணுவ அதிகாரிகள் கூறினர்.

இந்த மாதத் தொடக்கத்தில் மிகப்பெரிய ஆள்சேர்ப்பு முகாமை சிறிலங்கா கடற்படை நடத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்