யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொதுச் சந்தையின் வெளிப்புறமாக வாகன நிறுத்துமிடம் அமைந்திருக்கும் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 9:40 மணியளவில் கிளேமோர் தாக்குதலில் சிக்கி இரண்டு சிறிலங்கா காவல் துறையினர் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 13 பேர் படுகாயங்களும், 17 பேர் சிறுகாயங்களும் அடைந்தனர்.
படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களை சுன்னாகம் மருத்துவமனைக்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். காயமடைந்தோர் தெல்லிப்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக பலர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த சிறிலங்கா காவல்துறையினர் பலாலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.