இந்தியா-பாகிஸ்தான் இடையில் அமைதி ஒப்பந்தம் : பெனாசீர் வலியுறுத்தல்!
Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (16:18 IST)
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுடைய 60 ஆண்டுகால சுதந்திரத்தைக் கொண்டாடி வரும் வேளையில், வருங்காலச் சந்ததியினருக்கு அமைதியை உத்தரவாதமாகத் தரும் வகையில் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோ வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டனில் உள்ள மத்தியக் கிழக்குக் கல்விக் கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெனாசீர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு :
“இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களின் 60வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த நேரத்தில் வருங்கால சந்ததியினருக்கு அமைதியை உத்தரவாதமாகத் தரும் வகையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதை நாம் காண விரும்புகிறோம்.
கடந்த 1988-ஆம் ஆண்டு சார்க் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ந்தபோது, சார்க் அமைப்பை கலாச்சார அமைப்பு என்ற தன்மையிலிருந்து பொருளாதார அமைப்பாக மாற்ற நானும் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தியும் முயற்சி செய்தோம்.
அன்று முதல் நானும், இராஜீவ் காந்தியும் மண்டலத்தில் அமைதியை நிலைநாட்ட நீண்ட நடவடிக்கைளை எடுத்தோம். அவை, எதிர்க்கட்சிகளாலும் இராணுவத் தலைமைகளாலும் பலவாறு விமர்சிக்கப்பட்டன.
அந்த எதிர்க்கட்சிகளும், இராணுவத் தலைமையும் இன்று ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து, அமைதிப் பேச்சைத் தொடரும் நிகழ்வு எனக்கு மிகப்பெரிய திருப்தியளிக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மக்களால் ஆதரிக்கப்படும் கூட்டுப் பேச்சுமுறையை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்தக் சுட்டுப்பேச்சு தரக்கூடிய நல்ல முன்னேற்றத்தைக் காணவே நாங்கள் விரும்புகிறோம்.
இருந்தாலும், கூட்டுப் பேச்சில் தாமதமான முன்னேற்றம் ஏற்படுவதால், தெற்காசியாவில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் உள்ள முக்கியத்துவம் குறைந்துவிடாது” என்று பெனாசீர் கூறினார்.