ஈராக், ஆப்கன் போருக்கு 190 பில்லியன் டாலர் தேவை
Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (13:21 IST)
ஈராக், ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போர்களைத் தொடர 2008-ஆம் ஆண்டிற்கு 190 பில்லியன் டாலர் ( 19000 கோடி டாலர்) தேவை என்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் இராபர்ட் கேட்ஸ் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று கூறிக்கொண்டு இவ்வளவு பெரிய தொகையைக் கேட்பது இதுவே முதல்முறை ஆகும். கேட்சின் இந்தக் கோரிக்கைக்கு போர் எதிர்ப்பாளர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஈராக்கில் உள்ள கூடுதல் அமெரிக்கப் படைகளைஜூலை மாதம் வரை பராமரிக்கத் தேவையான நிதியும், அவர்களுக்கு சிறந்த நவீன ஆயுதங்களையுடைய வாகனங்களைத் தருவதற்கு ஆகும் செலவும் தனது கோரிக்கையில் அடக்கம் என்று கேட்ஸ் கூறியுள்ளார்.
ஈராக்கில் உள்ள கூடுதல் படைகளைப் பராமரிக்க மட்டும் 6பில்லியன் டாலர் செலவிடப்படவுள்ளது. "கூடுதலாக சுமார் 42 பில்லியன் டாலர் வேண்டும் என்று அதிபர் வைக்கவுள்ள கோரிக்கைதான், பாதுகாப்புத் துறையின் 2008ஆம் ஆண்டுத் தேவையை 190 பில்லியன் டாலர்களாக உயர்த்திவிட்டது" என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் வைக்கப்பட்ட கோரிக்கையைவிட, இப்போது 141.7 பில்லியன் டாலர் அதிகமாகக் கோரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கேட்சின் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
"ஒவ்வொரு ஆண்டும் போர் செலவுகள் அதிகரித்து வருகிறது. கடந்த 2002-ஆம் ஆண்டு 34 பில்லியன் டாலர் தேவைப்பட்டது. இந்த ஆண்டு 171 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது" என்று கலிபோர்னியாவைச் சேர்ந்த டயானா ஃபெய்ன்ஸ்டீன் குற்றம்சாற்றியுள்ளார்.