சட்டத்திருத்தம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை : பாக். உச்சநீதிமன்றம்!
Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (13:56 IST)
பாகிஸ்தானில் திருத்தப்பட்ட தேர்தல் விதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பலத்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு சட்டத்திருத்தம் செய்யும் அதிகாரமில்லை என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் இரண்டு பதவிகளை வகிப்பது மற்றும் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது ஆகியற்றுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
ஜெனரல் முஷாரஃப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக அதிபர் தேர்தல் விதிகள் திருத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது என்று மனுதாரர்கள் குற்றம்சாற்றியிருந்தனர்.
இவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, தலைமைத் தேர்தல் ஆணையர் நீதிமன்றம் போலச் செயல்படமுடியாது. எந்தச் சட்டத்தையும் உடைக்க முடியாது என்று நீதிபதி இராணா பகவன்தாஸ் தலைமையிலான அமர்வு கூறியது.
மேலும், அதிபர் இரண்டு பதவிகள் வகிப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட 3 வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வழக்கு விசாரணைகளின் போது, நாடாளுமன்றத் தேர்தல் விதிகள் ஏன் அதிபர் தேர்தலுக்குப் பொருந்தாது என்று விளக்கமளிக்கும்படி, அட்டர்னி ஜெனரல் மாலிக் கையூமிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.