தொலைக்காட்சியில் தோன்றினார் ஃபிடல் காஸ்ட்ரோ!
Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (14:30 IST)
கொடுமையான நோயினால் செயலிழந்து விட்டார் அல்லது இறந்துவிட்டார் என்பன உள்ளிட்ட பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு தொலைக்காட்சியில் தோன்றி பேட்டியளித்தார்.
தற்போது 81 வயதாகும் காஸ்ட்ரோ உலகவிசயங்கள், பனிப்போர் மற்றும் உலகப் பொருளாதாரம் பற்றிப் பேசியுள்ளார். ஆனால் கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி தொலைக்காட்சியில் தோன்றியதைவிட காஸ்ட்ரோவின் தோற்றத்தில் மாற்றம் காணப்பட்டுள்ளது.
"காஸ்ட்ரோ எப்போது இறப்பார் என்று யாருக்கும் தெரியாது" என்று அனைவரும் கூறிய நிலையில் "நான் இங்கேதான் இருக்கிறேன்" என்று காஸ்ட்ரோ கூறியுள்ளார்.
சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்கள் அடங்கிய விளையாட்டு வீரர்களின் உடையை அணிந்திருந்த காஸ்ட்ரோ, கடந்த வாரம் தான் எழுதிய அமெரிக்காவிற்கு எதிரான கட்டுரை பற்றிய விளக்கங்களை அளித்தார். அப்போது காஸ்ட்ரோவின் வயதைக் காட்டும் தாடியும், முடியும் சாம்பல் நிறத்தில் காட்சியளித்தது.
"கடந்த வாரம் யூரோவின் மதிப்பு 1.41 டாலராக இருந்தது. எனவே ஒரு பேரல் எண்ணையின் விலை 84 டாலராக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" காஸ்ட்ரோ குறிப்பிட்டார். இதிலிருந்து அவர் நிகழ்கால விசயங்களுடன் எவ்வாறு ஒன்றியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
மேலும் தொலைக்காட்சியில் தோன்றிய காஸ்ட்ரோவின் கைகளில், அமெரிக்கத் தலைவர் ஒருவர் அண்மையில் எழுதிய புத்தகம் ஒன்று இருந்தது. அதில், ஸ்பானிஷ் மொழியில் எழுதிய விசயங்களைத் தவிர மற்ற பகுதிகளைப் படித்தார்.
1959ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் மூலம் ஆட்சியை அமைத்த காஸ்ட்ரோ, தனது உடல்நலம் மோசமாக பாதிப்படைந்ததால் கடந்த 2006 ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்தார்.
அதன்பிறகு காஸ்ட்ரோவின் சிகிச்சை விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டன. அவ்வப்போது காஸ்ட்ரோவின் புகைப்படங்கள் அல்லது சிறிய வீடியோ காட்சிகள் மட்டும் வெளியிடப்பட்டு வந்தன.