இலங்கையில் மனித உரிமை மீறல் : ஆசிய மனித உரிமைகள் ஆணையம்!
Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (16:33 IST)
இலங்கையில் நீதிக்குப் புறம்பாக அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதையும், கடத்தப்படுவதையும் உடனடியாக நிறுத்தும் வகையில் ஐ.நா தலையிட்டு அவசர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது!
இலங்கையில் மொத்தமாக அப்பாவிப் பொதுமக்கள் கடத்தப்படும் போதும், கைது செய்யப்பட்ட பிறகும் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர் என்று ஹாங்காகைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றங்களில் தொடர்புடையவர்களாகக் கருதப்படுவோர் அரசின் பாதுகாப்புப் படைகளிலோ, புலனாய்வுத்துறை அமைப்புகளிலோ பணியாற்றுபவர்களாக உள்ளனர் என்றும் அந்த அமைப்பு குற்றம்சாற்றியுள்ளது.
அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் விடயத்தில் அதிகாரிகளின் இயலாமையை ஆசிய மனித உரிமை ஆணையம் விமர்சித்துள்ளது. இலங்கை அரசின் கண்டுகொள்ளாமையும், ஆர்வமின்மையுமே மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளியுள்ளது என்றும் அந்த அமைப்புச் சாடியுள்ளது.
கண்டுபிடிக்கப்படும் சடலங்களில் பல நீண்ட நாட்களாக மீட்கப்படாததால் அழுகிய நிலையில் உள்ளன. மேலும் பல சடலங்களை அவற்றின் உறுப்புக்களை வைத்தே அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. காணாமல் போகும் அல்லது கடத்தப்படும் நபர்களின் உறவினர்கள் தொடர்ந்து புகார்களை அளித்து வருகின்றனர். ஆனால் அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று மனித உரிமைக் கழகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஒன்றை ஐ.நா அமைக்கவேண்டும். அவர்கள், குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் மக்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சட்டங்களை இயற்றும்படியும், இப்போது உடனடியாகத் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அதிகாரிகளைத் தொடர்ந்து வற்புறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் கவனிப்பு அமைப்பு மற்றும் பன்னாட்டு நிவாரண அமைப்பு போன்ற பிற மனித உரிமை அமைப்புகளும் கூட ஐ.நா. உரிமைகள் கண்காணிப்புக் குழு இலங்கைக்கு வரவேண்டும் என்று அழைத்துள்ளன.
அதேநேரத்தில் ஸ்ரீலங்க அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. குற்றம்சாற்றப்படும் விவகாரங்களை விசாரித்து வருவதாகவும், நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படுவதைத் தாங்கள் விரும்பவில்லை என்றும் அரசு கூறியுள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்க அரசு, ஆசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையை நிராகரித்துவிட்டது. அந்த அறிக்கை பன்னாட்டுத் தரத்திற்கு முரண்பட்டு நிற்கிறது என்றும் தவறான, போலியான புள்ளி விவரங்களைக் கொண்டுள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக் கூறப்படும் குற்றச்சாற்றுக்களையும் அரசு மறுத்துள்ளது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களையும், சேவைகளையும் தாமதமின்றிக் கொண்டுசெல்லத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.