பெனாசீருக்கு எதிரான வழக்குகள் தொடரும் : பாகிஸ்தான் பிரதமர்!
Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (14:37 IST)
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோவிற்கு எதிரான வழக்குள் தொடரும் என்றும், சட்டத்திற்கு முன்னாள் அனைவரும் சமம்தான் என்றும் பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜிஸ் கூறியுள்ளார்!
புட்டோ நாடு திரும்புவது அவரது சொந்த முடிவு என்றும் அவருக்கு எதிராக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை அவர் சந்திக்க வேண்டும் என்றும் செளகத் அஜிஸ் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த சவுகத் அஜிஸ், பெனாசீர் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் அரசு எந்தவிதத் தொடர்பும் கொள்ளாது என்று தெளிவுபடுத்தினார். ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுவது முழுக்க முழுக்க அரசியல் மாற்றத்திற்கு செய்யப்படும் உத்தி என்றும் அவர் கூறினார்.
"நாங்கள் பெனாசீருடன் பேசினோம். ஆனால் பிறர் கூறுவது போன்ற காரணங்களுக்காக அல்ல... அடுத்த அரசை யார் அமைப்பது என்பதை வாக்குப் பெட்டிகள்தான் முடிவு செய்யும் " என்று சவுகத் தெரிவித்தார்.
நாட்டின் நலனுக்காக எல்லாக் கட்சிகளுடனும் அரசு பேசி வருகிறது. "பாகிஸ்தானை முன்னெடுத்துச் செல்வதற்காக குறிப்பிட்ட அடிப்படையான தேசியப் பிரச்சனைகளில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒருங்கிணையச் சம்மதித்தால் அது பாகிஸ்தானுக்கு நல்லது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கேள்வி ஒன்றிற்கு விடையளிக்கையில், "அதிபர் பர்வேஸ் முசாரஃப் இரண்டு பதவிகளை வகிப்பது சட்டபூர்வமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்துள்ளது" என்றும் தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு விசயங்கள் பற்றிப் பேசிய செளகத் அஜிஸ், ஆஃப்கானிஸ்தானில் இப்போது நிலவிவரும் வன்முறைகளால் பாகிஸ்தான் எல்லைச் சிக்கலைச் சந்திக்கிறது என்றார். மண்டலத்தில் நிலவும் அமைதியைவிட நிலையான ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தானுக்கு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.