அணு ஒப்பந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட வேண்டும் : அமெரிக்கா வலியுறுத்தல்!
Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (14:35 IST)
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த விவகாரத்தில் எவ்வளவு விரைவாகச் செயல்பட முடியுமோ அவ்வளவு விரைவாக நகர வேண்டும் என்று இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது!
"இந்தியாவில் சில அரசியல் விவாதங்களும், கலந்துரையாடல்களும் நடந்துவருவதை நாங்கள் காண்கிறோம். ஆனால் இன்னும் சில படிகளைத் தாண்டிய பிறகு நாங்கள் மீண்டும் எங்கள் நாடளுமன்றத்தில் மற்றொரு சுற்று விவாத்திற்குச் செல்லவேண்டும்" என்று தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பகுதிக்கான அமெரிக்க அரசின் துணைச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் கூறியுள்ளார்.
வாசிங்டன்னில் நடைபெற்ற இந்திய - அமெரிக்க வணிக் கூட்டமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், "இந்த விவகாரம் தொடர்பாக நடந்து வரும் சட்டபூர்வமான விவாதங்களும் கலந்துரையாடல்களும் எங்களுக்கு மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை" என்றார்.
"எங்களுக்கு அரசியல் கால அட்டவணைகள் உள்ளன என்று எங்களுக்குத் தெரியும் எனவே எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக நகருவது நல்லது" என்று அவர் கூறினார்.
அணுசக்தி ஒப்பந்த விவகாரம், அடிப்படையில் இரு நாடுகளுக்கும் நல்லது என்று விவரித்த பெளச்சர், "அமெரிக்கச் சட்டங்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்வதற்காக மிகக் கவனமாக விவாதிக்கபடவேண்டிய ஒப்பந்தம் இது" என்றார்.
123 அணு ஒப்பந்தம் முழுமைபெற, இந்தியா பன்னாட்டு அணுசக்தி முகமையுடன் பேச்சு நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு படிகளைத் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. இருநாடுகளின் ஜனநாயக முறையிலான நடவடிக்கைகளையும் சந்தித்தாக வேண்டும் என்று அவர் கூறினார்.
அமெரிக்கச் சட்டங்களின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது, அதேநேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும் அதிபர் ஜார்ஜ் புஷ்சும் ஒப்புக் கொண்ட விடயங்களுக்கும் இது பொருந்துகிறது என்று பெளச்சர் தெரிவித்தார்.