சுமத்ரா அருகே பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

Webdunia

புதன், 12 செப்டம்பர் 2007 (17:41 IST)
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவை ஒட்டிய கடற்பகுதியில் மையம் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!

இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவிற்கு வடமேற்கே உள்ள பென்கூலு எனும் கடலோர நகரத்திற்கு அருகே கடற்பகுதியில் 0 முதல் 35 கி.மீ. ஆழம் உள்ள கடற்பகுதியில் மையம் கொண்டு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இத்தகவலை வெளியிட்டுள்ள அமெரிக்க புவியியல் துறையின் சுனாமி எச்சரிக்கை மையம், பூமத்திய ரேகையிலிருந்து தெற்கே 3.84 டிகிரியும், தீர்க்க ரேகை 102.17 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் மையம் கொண்டு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக சுனாமி பேரலைகள் பென்கூலுவை தாக்கும் அபாயம் உள்ளதென எச்சரித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் ஏதுமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்