ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு கொண்டு வரும் திட்டத்தில் ஈரானின் புதிய கோரிக்கையால் சிக்கல் எழுந்துள்ளது.
குழாயின் மூலம் எரிவாயு கொண்டு வருவதற்காக இம்மூன்று நாடுகளும் விலை நிர்ணயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துவிட்டன.
இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்பட்ட விலையின் மீது மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று ஒரு பிரிவை அந்த ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி உள்ளது புதிய சிக்கலை தோற்றுவிப்பதாக பாகிஸ்தானின் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறையின் அதிகாரிகள் கூறியதாக ஜியோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் அரசின் இந்த புதிய கோரிக்கை மீது கருத்து கூறுமாறு தங்கள் நாட்டு தொழில்நுட்பக் குழுவிற்கு பாகிஸ்தான் அரசு பரிந்துரை செய்துள்ளதாக அத்தொலைக்காட்சி செய்தி கூறுகிறது.