ஹைதராபாத் குண்டுவெடிப்பு : எவரும் கைது செய்யப்படவில்லை - வங்கதேச அரசு!

Webdunia

புதன், 5 செப்டம்பர் 2007 (20:06 IST)
44 பேர் கொல்லப்பட்ட ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்று வங்கதேச அரசு கூறியுள்ளது!

ஹைதராபாத் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் வங்கதேசத்தில் இருப்பதாகவோ, அவர்களை கைது செய்ய வேண்டும் என்றோ எந்தக் கோரிக்கையும் இந்திய அரசிடம் இருந்து வரவில்லை என்றும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் வங்கதேச அரசு அயலுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தை பயங்கரவாதம் பெருகும் இடம் என்று இந்திய ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது தெளிவான உள்நோக்கம் கொண்டது என்றும், சங்கடப்படுத்தக்கூடியது என்றும் அந்நாட்டு அயலுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

ஹைதராபாத் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்படும் மொஹம்மது ஷரிஃபுதின் என்ற பயங்கரவாதி வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டதாக செயதிகள் வந்தது. ஆனால் அந்தப் பெயரில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று வங்கதேச அயலுறவு அமைச்சக செயலர் மொஹம்மது தவ்ஹித் ஹூசேன் கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளை ஒடுக்க அந்நாட்டு அரசு ஒத்தழைப்பு தர வேண்டும் என்றும், அதனை சமீபத்தில் நடந்த கிழக்காசிய நாடுகளுக்கான உள்துறை செயலர்கள் மாநாட்டில் எடுத்துக் கூறப்பட்டதாகவும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்