உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் தனது அயலுறவுக் கொள்கையை சுதந்திரமாக அமைத்துக்கொள்வதில் அமெரிக்காவிற்கு எந்த நெருடலும் இல்லை என்று அமெரிக்க அயலுறவுப் பேச்சாளர் டாம் கேசி கூறியுள்ளார்!
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்காக இந்தியாவின் அயலுறவுக் கொள்கை ஈரான் போன்ற நாடுகளின் விஷயத்தில் தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தால் அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்று அமெரிக்காவிற்கான இந்தியத் தூரர் ரோனன் சென் கூறியிருந்தது பற்றி கருத்து கேட்டதற்கு டாம் கேசி இவ்வாறு கூறியுள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டாம் கேசி, "ஈரானுடன் அமெரிக்காவிற்கு தனித்த சில பிரச்சனைகள் உள்ளன. அந்நாடு அணு ஆயுதத்தை உருவாக்காமல் தடுக்க சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் விரிவான முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்றும், மத்திய கிழக்காசியாவில் நிலைத்தன்மையை ஈரான் எந்தவிதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம்" என்று கேசி கூறியுள்ளார்.
ஈரான் பிரச்சனை குறித்து இந்திய நண்பர்களுடன் விவாதிக்கும் போதெல்லாம், இப்படிப்பட்ட சிக்கல்களை அவர்கள் கருத்தில் கொண்டு அந்நாட்டுடனான உறவு குறித்து தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகின்றோமே தவிர, எந்தவொரு நாட்டின் அயலுறவுக் கொள்கையையும் நாங்கள் வகுத்தளிக்க தயாராக இல்லை என்று கேசி கூறியுள்ளார்.