மருத்துவர் ஹனீஃபிற்கு எதிரான குற்றச்சாற்றுகள் கைவிடப்பட்டது!

Webdunia

வெள்ளி, 27 ஜூலை 2007 (13:52 IST)
இங்கிலாந்தின் கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃபிற்கு எதிரான குற்றச்சாற்றை ஆஸ்ட்ரேலிய காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது!

கிளாஸ்கோ தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அஜாக்கிரதையாக தனது செல்போன் சிம்கார்டை அளித்து உதவினார் என்றும், அது பயங்கரவாதிகளுக்கு தெரிந்தோ, தெரியாமலோ உதவியதாகும் என்றும் ஹனீஃபிற்கு எதிராக ஆஸ்ட்ரேலிய காவல்துறை சுமத்திய குற்றச்சாற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காமன்வெல்த் சட்ட விசாரணை இயக்குநர் டாமியன் பக் அளித்த உத்தரவை அடுத்து ஆஸ்ட்ரேலிய காவல்துறை ஹனீஃபிற்கு எதிரான குற்றச்சாற்றை விலக்கிக் கொண்டுள்ளது.

இத்தகவலை கான்பெராவில் செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட காமன்வெல்த் இயக்குநர் டாமியன் பக், மருத்துவர் ஹனீஃப் மீது சட்டப்படி வழக்கு தொடர்ந்து தண்டிப்பதற்கான ஆதாரம் இல்லை என்பது தனது கருத்தென்றும், அவருக்கு எதிராக ஆஸ்ட்ரேலிய காவல்துறையின் குற்றச்சாற்றுகள் தவறானவை என்பதாலும், தான் மறுபரிசிலனைக்கு உத்தரவிட்டதாகக் கூறினார்.

பயங்கரவாதிகளுக்கு 'உதவியதாக' எவ்வாறு ஹனீஃப் மீது தவறுதலாக குற்றம் சாற்றப்பட்டது என்பது குறித்து தான் விசாரிக்கப் போவதாகவும் டாமியன் பக் கூறியுள்ளார். இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் ஆஸ்ட்ரேலிய கூட்டமைப்பின் காவல் ஆணையர் மிக் கீட்லியும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (பி.டி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்