பாகிஸ்தானில் இன்று இரண்டு இடங்களில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல்களில் 7 காவலர்கள் உள்பட 23 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத்தில் உள்ள லால் மசூதிக்குள் நுழைந்து ராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு தற்கொலைப் படை தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் சீனப் பொறியாளர்கள் சென்ற வாகனம் ஒன்றை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 7 காவலர்கள் உள்பட 15 பேர் பலியாகி இருப்பதாக காவல் துறை அதிகாரி அப்துல்லாக் அப்ரிடி தெரிவித்தார்.
தீவிரவாதிகள் நடத்திய இந்த தற்கொலைப் படை தாக்குதலில் சீனப் பொறியாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்றும், அவர்கள் சென்ற வாகனம் சம்பவ இடத்தை கடந்த பிறகு குண்டு வெடித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அதேபோல் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் காவலர் பயிற்சி மையத்தின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த வெடி குண்டுகள் நிரப்பபட்ட வாகனம் வெடித்ததில் 8 அப்பாவி பொது மக்கள் உடல் சிதறி பலியாகினர்.