விசா ரத்து : ஹனீஃப் முறையீடு!

Webdunia

புதன், 18 ஜூலை 2007 (16:16 IST)
கிளாஸ்கோ விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாற்றப்பட்ட இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃப், ஆஸ்ட்ரேலிய குடியேற்றத் துறை தனது பணி விசாவை ரத்து செய்ததையடுத்து பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்!

தனக்கு பிரிஸ்பேன் நீதிமன்றம் பிணைய விடுதலை அளித்த பின்னரும், ஆஸ்ட்ரேலிய காவல்துறை தொடர்ந்து தன்னை சிறையில் வைத்திருப்பதை எதிர்த்தும் தனது விசாவை குடியேற்றத்துறை ரத்து செய்ததை நிராகரிக்குமாறு கோரியும் மெல்போர்ன் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக ஹனீஃபின் வழக்கறிஞர் பீட்டர் ரஸ்ஸோ கூறியுள்ளார்.

ஹனீஃபிற்கு அளிக்கப்பட்ட பணி அனுமதியை (விசா) ரத்து செய்ததற்கு காரணம் கூறியுள்ள அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ், ஹனீஃப் குண நலன் சோதனையில் வெற்றி பெறவில்லை என்பதற்காக அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்