ஹனீஃப் இந்தியாவிற்கு அனுப்பப்படுவார் : ஆஸ்ட்ரேலியா!

Webdunia

செவ்வாய், 17 ஜூலை 2007 (14:34 IST)
கிளாஸ்கோ விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாற்றப்பட்டுள்ள இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃப் மீதான விசாரணை முடிந்ததும் இந்தியாவிற்கு அனுப்பி வைப்போம் என்று ஆஸ்ட்ரேலியா கூறியுள்ளது!

தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு தனது செல்பேசியின் சிம் கார்டை அளித்து உதவியுள்ளார் என்று ஹனீஃப் மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது. ஆனால், அவருடைய செயல் எவ்வித குற்ற உள்நோக்கம் கொண்டது அல்ல என்றும் அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்பொழுது பிணையில் விடுவிக்கப்பட்டு பின் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள மொஹம்மது ஹனீஃபை அவருக்கு எதிரான சட்ட நடைமுறைகள் முடிவிற்கு வந்த பின்னர் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று ஆஸ்ட்ரேலிய குடியேற்றத் துறை அதிகாரி கெவின் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்டு, பணி விசா ரத்து செய்யப்பட்டு தற்பொழுது மீண்டும் கைதியாக உள்ள ஹனீஃபிற்கு ஆஸ்ட்ரேலிய காவல்துறை குற்றவியல் நீதி சான்றிதழ் அளிக்கும் என்றும், அதன் பொருள், சட்ட ரீதியான நடவடிக்கைகள் முடியும் வரை அவர் ஆஸ்ட்ரேலியாவிலேயே இருந்தாக வேண்டும் என்பதுதான் என ஏ.பி.சி. ஆன்லைன் செய்தி கூறியுள்ளது.

ஹனீஃபிற்கு எதிரான குற்றச்சாற்று வலிமையானது என்றும், அது தொடர்பாக அதிருப்தி ஏதும் இருந்தால் அவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்யலாம் என்றும் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார். (பி.டி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்