பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்ட மதராசா மாணவர்கள் 500 பேர் இன்று சரணடைந்துள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத் லால் மஸ்ஜித் மசூதியில் இருந்து ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட மதராசா மாணவர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மதராசா மாணவர்கள் மத கோட்பாடுகளை அமுல் படுத்துவதிலும், வெளிநாட்டு பழக்க வழக்கங்களுக்கு தடை விதிப்பதிலும் தீவிரம் காட்டி வந்தனர். இதனால் அந்நாட்டு காவல் துறைக்கும், மதரசா மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
ராணுவத்தினருக்கும், மாணவர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், மதராசாவைச் சேர்ந்த சில மாணவர்கள் காவல் துறை அதிகாரிகளை கடத்திச் சென்றனர். இதையடுத்து மதராசா மாணவர்கள் தங்கியிருந்த சிவப்பு மசூதியைச் சுற்றி காவல் துறையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். மாணவர்கள் சரணடைவதற்கு இன்று காலை 11 மணி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. அந்த கெடு பிறகு பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
ராணுவம் மசூதிக்குள் நுழைய ஆயத்தமான நேரத்தில் 500க்கும் மேற்பட்ட மதராசா மாணவ, மாணவிகள் வெளியே வந்து சரணடைந்தனர். ஆயினும் திட்டமிட்டபடி நடவடிக்கையை மேற்கொள்ள ராணுவம் தயாராகி வருகிறது.