மீனவர்களை விடுவிக்க இந்தியா-பாக். முடிவு

Webdunia

புதன், 4 ஜூலை 2007 (13:44 IST)
இந்திய, பாகிஸ்தான் சிறைகளில் உள்ள மீனவர்கள் அனைவரையும் ஆகஸ்ட் 14, 15ஆம் தேதிகளுக்கு முன்னர் விடுதலை செய்வதென இரு நாடுகளின் உள்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஒரு அங்கமாக பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றை ஒன்றிணைந்து செயலாற்றி முறியடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்திய உள்துறைச் செயலர் மதுகர் குப்தா, பாகிஸ்தான் உள்துறை செயலர் சையத் கமல் ஷா ஆகியோர் தலைமையிலான குழுக்களுக்கு இடையே தலைநகர் டெல்லியில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், தங்களுடைய தண்டனைக் காலம் முடிந்துள்ள அனைத்துக் கைதிகளையும், இரு நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் இரு நாடுகளின் சுதந்திர தினங்களுக்கு முன்பு விடுவிப்பது என இன்று நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல், சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றம், கள்ள நோட்டை புழக்கத்தில் விடுவது போன்ற குற்றங்களைத் தடுக்க நமது நாட்டின் மத்திய புலனாய்வு கழகமும், பாகிஸ்தானின் தேச புலனாய்வு அமைப்பும் ஒன்றிணைந்து பணியாற்றுவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச காவல்துறையால் வழக்குத் தொடரப்பட்டு விசாரணையில் உள்ள வழக்குகளை வேகமாக முடிப்பது தொடர்பாக இரு நாடுகளின் புலனாய்வு அமைப்புகளும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தலைநகரில் உள்ள லால் மஸ்ஜித் மசூதியில் நடந்து வரும் மாணவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலினால் உருவாகியுள்ள சிக்கலின் காரணமாக தனது இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு பாக். உள்துறை செயலர் சையத் கமல் ஷா இன்று காலை அவசரமாக இஸ்லாமாபாத் சென்றுவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்