இந்த ஆண்டிற்குள் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்-ரைஸ்

Webdunia

வியாழன், 28 ஜூன் 2007 (10:38 IST)
இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டு வரும் 123 ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று அமெரிக்க அயலுறவுச் செயலர் கோண்டலிசா ரைஸ் கூறியுள்ளார்.

யு.எஸ். -இந்திய வர்த்தகப் பேரவை (USIB) எனும் அமைப்பு வாஷிங்டனில் நடத்திய விருது வழங்கும் விழாவில் கெளரவ விருதை பெற்றுக் கொண்டு உரையாற்றிய கோண்டலிசா ரைஸ், 123 ஒப்பந்தத்தை உருவாக்குதில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த கொள்கை மோதலுக்கு தீர்வு காணப்பட்டு இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று கூறினார்.

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்பது சுலபமான ஒரு விவகாரமாக இருந்திருந்தால் இந்த ஒப்பந்தம் என்றைக்கோ கையெழுத்தாகியிருக்கும் என்று கூறிய கோண்டலிசா ரைஸ், எவ்வளவு கடினமான தடைகள் இருப்பினும், அணுசக்தி ஒத்துழைப்பு மதிப்பு வாய்ந்தது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், அதிபர் புஷ்ஷூம் கருதியதால் தான் இது சாத்தியமாகும் நிலை உருவாகி உள்ளது என்று கூறினார்.

எப்பாடுபட்டாவது இந்தியாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள நாங்கள் துடிப்பதாக குற்றம்சாட்டினார்கள். இப்பொழுது அப்படிப்பட்ட ஒப்பந்தத்தை நிச்சயப்படுத்த நாங்கள் களைப்பு பாராமல் முயற்சித்து வருகிறோம் என்று பலத்த கைதட்டலுக்கு இடையே கோண்டலிசா ரைஸ் கூறினார்.

2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் மன்மோகனும் - புஷ்ஷூம் வெளியிட்ட கூட்டறிக்கை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஒரு பெரும் முன்னேற்றம் என்று கூறியவர், ஆனால் அந்த முன்னேற்றத்தை முழுமையாக இன்னும் எட்டவில்லை என்று கூறினார்.

"உறுதியுடனும், கடின உழைப்புடனும் மேற்கொள்ளப்படும் இம்முயற்சியின் காரணமாக இந்த ஆண்டின் இறுதிக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவோம் என்பதில் நான் நிச்சயமாக உள்ளேன்" என்று ரைஸ் கூறினார்.

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு சாத்தியமா என்று பலரும் சந்தேகித்தனர். ஆனால், இன்று அந்த சாத்தியக்கூற்றை உறுதிப்படுத்தியுள்ளோம். இதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே வணிகம், விஞ்ஞானம், வேளாண்மை, எரிசக்தி, சுற்றுச்சூழல் எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச பாதுகாப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வழி பிறக்கும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்