புலிகள் தாக்குதல் : சிறிலங்க ராணுவத்தினர் 5 பேர் பலி!

Webdunia

புதன், 27 ஜூன் 2007 (21:16 IST)
இலங்கையின் மன்னார் பகுதியில் உள்ள சிறிலங்க ராணுவத்தின் முகாமின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்!

மன்னாரில் உள்ள தள்ளாடி படைத்தளத்தின் மீது நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு இந்த திடீர் தாக்குதலை தாங்கள் மேற்கொண்டதாகவும், இத்தாக்குதலில் ராணுவத்தினரின் காவல் அரண்கள் அழிக்கப்பட்டது மட்டுமின்றி, ராணுவத்தினர் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்க ராணுவத்தினரிடம் இருந்து எல்.எம்.ஜி.-1, ரி-56 துப்பாக்கிகள் இரண்டு, தொலைத்தொடர்பு சாதனம் ஒன்றை தாங்கள் கைப்பற்றியதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்த மாத துவக்கத்தில் வவுனியா - மன்னார் எல்லையில் உள்ள விளாத்திகுளம் என்ற இடத்தில் நடந்த மோதலில் சிறிலங்க ராணுவத்தின் ஒரு பட்டாலியனைச் சேர்ந்த 5 அதிகாரிகள் உட்பட 72 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், இரு அதிகாரிகள் உட்பட 24 படையினர் காணவில்லை என்றும், 20 அதிகாரிகளும், 298 படையினரும் காயமுற்றதாகவும் கொழும்புவில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சண்டையில் விடுதலைப் புலிகள் 800 பேர் கொல்லப்பட்டதாக சிறிலங்க ராணுவம் தெரிவித்திருந்தது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று அச்செய்தி கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்