அணு பயங்கரவாத தடுப்பு உடன்படிக்கை : அடுத்த மாதம் நடைமுறை!

Webdunia

வியாழன், 14 ஜூன் 2007 (19:04 IST)
அணு ஆயுதங்கள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்குச் சென்றுவிடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு உடன்படிக்கை அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணு பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பிற்கான சர்வதேச உடன்படிக்கையில் இன்று வங்கதேசம் கையெழுத்திட்டுள்ள நிலையில், ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அணு பயங்கரவாதம் உலகை எதிர்நோக்கியுள்ள மிக அபாயகரமான அச்சுறுத்தல் என்று கூறிய ஐ.நா. பொதுச் செயலர், அப்படிப்பட்ட ஒரு தாக்குதல் நடத்தப்பட்டால் கூட அது மிகப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.

அந்த சாத்தியத்தை தடுப்பது மட்டுமின்றி, எந்த நிலையிலும் அப்படிப்பட்ட பேரழிவு ஏற்படாமல் தடுக்கவே சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த 13வது உடன்படிக்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று பான் கீ மூன் கூறியுள்ளார்.

ரஷ்யா பரிந்துரைத்த இந்த உடன்படிக்கையை 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் ஐ.நா. ஏற்றுக்கொண்டது. இதுவரை 115 நாடுகள் அதில் கையெழுத்திட்டுள்ளன. (பி.டி.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்