நாளை பேச்சுவார்த்தைகளுக்கான முக்கியமான ஆவணம் ஒன்று வெளியிடப்படவுள்ள நிலையில், பணக்கார நாடுகள் வெப்பவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் தீவிர முனைப்பு காட்டாவிட்டால் தாங்கள் மாநாட்டிலிருந்து வெளியேறுவதாக லத்தீன் அமெரிக்க நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மெக்சிகோவில் உள்ள கான்கன் நகரில் ஐ.நா. வானிலை மாநாடு நடைபெற்று வருகிறது.
அதாவது கியோட்டோ உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள அளவுகளில் வெப்பவாயு வெளியேற்றம் குறைக்கப்படவேண்டும் என்று இந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
9 லத்தீன் அமெரிக்க நாடுகள் அமைப்பான பொலிவியக் கூட்டணி நாடுகள் சட்ட ரீதியாக பிணைக்கும் ஒப்பந்தம் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கான ஆவணத்தை உருவாக்கும் போது பணக்கார நாடுகளின் வாக்குறுதி அவசியம் என்று மெக்சிகோ அதிபரை இந்த நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.
அதாவது கியோட்டோ ஒப்பந்தத்திற்குத் திரும்பவேண்டும், அதுவல்லாமல் கோபன் ஹேகன் ஏமாற்று வேலைகள் மீண்டும் தொடருமானால் தாங்கள் வெளியேறுவோம் என்று லத்தீன் அமெரிக்க நாடுகள் மிரட்டல் விடுத்துள்ளன.
மேலும் பேச்சுவார்த்தைகளிலிருந்தே வளரும் நாடுகளும் ஏழைநாடுகளும் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கியோட்டோ ஒப்பந்தம் மட்டுமே வெப்பவாயு வெளியேற்றத்தை பணக்கார நாடுகள் குறைப்பதில் சட்டரீதியான பிணைப்பை ஏற்படுத்திய ஒப்பந்தம் ஆகும்.
இதனால்தான் வளரும் நாடுகள் அதனை வலியுறுத்துகின்றன. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகள் கியோட்டோ ஒப்பந்த அளவுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் என்று கான்கன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெனிசூலா நாட்டு பிரதிநிதி இது குறித்துக் கூறுகையில், "எந்த வித உறுதியையும் வழங்காமல் அந்த நாடுகள் செல்லும் சூழ்நிலையை நாங்கள் ஆதரிப்பதாயில்லை. கியோட்டோ உடன்படிக்கை மீதான உறுதியான நடவடிக்கையை நாங்கள் வலியுறுத்துவோம்," என்று கூறினார்.
கியோட்டோ ஒப்பந்தத்தை அழிக்கும் எந்த ஒரு நடவடிக்கைகளையும் நாங்கள் ஏற்கப்போவதில்லை. அதற்குப் பதிலான எந்த மாற்று நடைமுறைகளையும் அனுமதிக்க மாட்டோம். கியோட்டோ ஒப்பந்தத்தில் பிற்பாடு சேர்க்கப்பட்ட இரண்டாம் கட்ட பிணைப்புகளையும் நாங்கள் வலியுறுத்துவோம் என்று ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த வானிலை மாநாட்டு பிரதிநிதியும் உறுதி கூறியுள்ளார்.
இப்போதைக்கு பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் கையெழுத்திடுவதாக ஒப்புக்குக் கூறியுள்ளன.
அமெரிக்கா ஒரு போதும் கியோட்டோவை ஏற்கப்போவதில்லை. இதனால் சீனாவும் தகராறு செய்யும். இந்த நிலையில் லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் பிற வளரும் நாடுகளும் கியோட்டோவை வலியுறுத்துவது தொடர்ந்தால் கான்கன் மாநாடும் தோல்வி அடையும் என்று தெரிகிறது.