உயிரிப்பரவலும் நோய்த்தடுப்பும்

வியாழன், 2 டிசம்பர் 2010 (15:13 IST)
தொற்று நோய்க் கிருமிகள் உருவாகாமல் சுற்றுச்சூழல் அமைப்புகளை உயிரிப்பரவல் (Biodiversity) பாதுகாப்பதாக ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் மூலம் முடிவுக்கு வந்துள்ளனர்.

நமது சுற்றுசூழலிலிருந்து ஒரு உயிரியின் இனம் அழிந்தாலும் நோய்க்கூறுகள் மனிதனைத்தாக்கும் அபாயம் இருந்துவருவதாக அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உதாரணத்திற்கு ஒன்று கூறவேண்டும் என்றால் கொசுவாகட்டும், ஈயாகட்டும் எந்த ஒரு சிறு உயிரியாகட்டும் சுற்றுச்சூழலில் அதற்கென்று ஒரு வாழ்வியல் சுழற்சி, உணவுச் சுழற்சி உள்ளது.

அது வாழும் இடங்களை மனிதன் ஆக்ரமித்து அந்த இடத்தையும் சாக்கடை, குப்பை என்று நாசம் செய்யும் போதுதான் கொசுக்கள் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. சுற்றுசூழலை நாம் சுத்தமாக வைத்திருக்கும் போது கொசுக்கடியினால் நமக்கு நோய் ஏற்படாது.

கொசுக்கள் தன்னிலே நோய்க்கூறுகளை உடையதல்ல. அது போலத்தான் எந்த ஒரு உயிரியும். சிறு உண்ணிகளையும், புழுக்களையும் உண்ணும் பூச்சி இனங்கள் அழிந்தால் உண்ணிகளும் புழுக்களும் மனித வாழ்க்கையுடன் தொடர்பு கொள்ளும் போது நோய்கள் உருவாகின்றன.

நியூயார்க் அன்னான்டேலில் உள்ள பார்ட் கல்லூரி உயிரியல் விஞ்ஞானி பெலிசியா கீஸிங் மற்றும் இவரது தலைமையிலான குழு ஒன்று கடந்த ஆண்டுகளில் வெளிவந்த பல்வவிதமான உயிர்ப்பரவல் குறித்த ஆய்வுத்தரவுகளை ஆராய்ந்தனர்.

இதில் "உயிரிப்பரவல் அழிவு நோய்களின் தோற்றம்" என்ற ஒரு வடிவமாதிரி உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வு முடிவுகள் "நேச்சர்" இதழில் வெளிவந்துள்ளது.

சில வகை உயிரிகள் மறு உறுபத்தி வேலைகளைச் செய்ய முடியாமல் தன் அழிவிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் அதிகம் நாட்டம் செலுத்தும் சூழல் அதற்கு ஏற்படும்போது உயிர்வாழ்வதற்கான சூழல் சீரழியும்போதும் அந்த உயிரினம் விரைவில் அழிந்து போகிறது.

மாறாக ஒரு உயிரினத்தின் மறு உற்பத்திச் சக்தி அதிகமாகவும் அது தன்னைத் தற்காத்துக்கொள்வதில் சக்தி குறைவாகவும் உள்ள போது அது நோய்க்கிருமிகளைத் தாங்கி நிற்கிறது. ஆனால் இவை மனிதனுடன் தொடர்வு கொள்ளும்போதுதான் மனித நோய்கள் தோன்றுகின்றன.

ஆனால் முந்தைய உயிரினம் அழிவது பற்றி நாம் குறிப்பிடுகையில் அதன் உணவுச் சுழற்சியில் இடைவெளி விழுந்து அதனால் ஏற்படும் நோய்கள் பிற உயிர்ப்பரவலையும் தடுத்து விடுகிறது. ஆகவே இரண்டுமே ஒருவிதத்தில் ஆபத்தானதுதான்.

சிறு பாலூட்டிகளின் உயிர்ப்பரவல் சூழல் அழிந்தால் அதனால் உருவாகும் வைரஸ்கள் மனிதனைத் தாக்கினால் கொடிய நுரையீரல் நோய்கள் ஏற்படுவது இந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஒரு வகையான எலிகளைப் பிடித்து உண்ணும் மற்றொரு உயிரினம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வந்ததால் அந்த எலியிலிருந்து ஒரு பரவும் கொடிய வைரஸின் அளவு 2 சதவீதத்திலிருந்து 14%-ஆக அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதே போல் வேறொரு 3 ஆய்வுகளை இவர்கள் ஆய்வு செய்தபோது பறவை உயிரினப்பரவல் கடுமையாகக் குறைந்ததால் அமெரிக்காவில் மூளைவீக்க நோய் அதிகமாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.

பறவையினங்களின் உயிர்ப்பரவல் குறைவாகிப் போனதால் கொசுக்களில் இந்த வைரஸ் பரவி அதன் மூலம் மனிதர்களுக்கும் மூளைவீக்க நோய் பரவியுள்ளது. மூளைவீக்கம் மூளைக்காய்ச்சலுக்கு இட்டுச் செல்வதாகும்.

மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களில் 50 சதவீதம் மனிதனின் நில உபயோகம், வேளாண் மற்றும் உணவு உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்படுவதையும் கீஸிங் தலைமை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உயிரிப்பரவலை அழிக்காமல் பெருக்குவதால் தொற்று நோய்க்காரணிகள் குறையும் என்று இந்த ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு முடிவாகக் கூறியுள்ளனர்.

எனவே உயிரிப்பரவலை வளர்ப்போம் நோய்களைக் குறைப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்