வானிலை மாற்றத்தால் தெற்காசியாவில் 160 கோடி மக்கள் வறுமைக்கு தள்ளப்படலாம்
வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (14:40 IST)
புவி வெப்பமடைதலால் ஏற்படும் வானிலை மாற்றங்களின் விளைவாக தெற்காசியாவில் உணவு மற்றும் தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டு சுமார் 160 கோடி ஏழை மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.
இதே போன்ற வெப்ப வானிலை தொடர்ந்தால் தெற்காசியாவில் அரிசி, சோளம், கோதுமை ஆகியவற்றின் விளைச்சல் முறையே 10%, 17%, 12% அளவிற்குக் குறையும் அபாயம் உள்ளது என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஆப்கனிஸ்தான், வங்கதேசம், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகள் வானிலை மாற்றங்களின் விளைவாகிய காலம் தவறிய கன மழை, பஞ்சம், வெள்ளம், பனிச் சிகரங்கள் உருகுதல் ஆகியவற்றினால் உணவு, தானிய விளைச்சல் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் தெற்காசிய தலைமை இயக்குனர் குனியோ செங்கா இது பற்றி கூறுகையில், "உணவுப் பற்றாக்குறையினால் தெற்காசியாவில் மேலும் 50 லட்சம் குழ்ந்தைகள் ஊட்டச்சத்து இன்றி வாட நேரிடும் அபாயம் உள்ளது" என்றார்.
காட்மாண்டூவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வானிலை மாற்றங்களின் தெற்காசிய விளைவுகள் வேளாண்மையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் ஏழை மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்" என்றார்.
உலகில் இருக்கும் ஒட்டு மொத்த ஏழை மக்கள் தொகையில் தெற்காசியப் பகுதியில் 50% உள்ளனர். இவர்கள் வாழ்க்கை பெரும்பாலும் வேளாண்மையை நம்பியே உள்ளது என்று ஆசிய வளர்ச்சி வங்கி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் தெற்காசிய நாடுகள் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கியின் தெற்காசிய பிரிவு தலைமை இயக்குனர் செங்கா, புவி வெப்பமடைவதன் விளைவுகளை எதிர்கொள்ளும் தெற்காசிய ஏழை மக்களுக்கு சர்வதேச நாடுகள் தங்கள் உதவிக்கரங்களை நீட்டவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்த ஆய்வை நடத்திய சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் முழு அறிக்கை இந்த மாத இறுதியில் பாங்காக்கில் நடைபெறும் ஐ.நா. வானிலை மாற்ற கூட்டத்தில் முன் வைக்கப்படுகிறது.