2 டி‌ரில்லியன் டன்கள் பனி உருகியுள்ளது!

புதன், 17 டிசம்பர் 2008 (18:37 IST)
2003ஆம் ஆண்டு முதல் தென் துருவப் பகுதியான அண்டார்டிகா, வட துருவத்திலுள்ள கிரீன்லேண்ட், அலாஸ்கா ஆகியவற்றின் நிலப்பகுதியில் உள்ள 2 டிரில்லியன் (1 டிரில்லியன் = 1,000 பில்லியன்; 1 ‌பி‌ல்‌லிய‌ன் = 100 கோடி) டன் பனி உருகியுள்ளதாக நாசாவின் விண்வெளி செயற்கைக்கோள் விவரம் தெரிவிக்கிறது.

நாசாவின் கிரேஸ் செயற்கைக்கோள், பனி எடையைக் கொண்டு இந்த கணக்கிடுதல்களை செய்துள்ளது. கிரீன்லேண்ட் நிலப்பகுதியில் உள்ள பனி கடந்த 5 ஆண்டுகளில் அதிகம் உருகியுள்ளதாக இந்த விவரம் தெரிவிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் அலாஸ்காவில் நடப்பு ஆண்டில் பனி உருகுதல் அதிகம் இல்லையெனினும் 2003ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டு வரும் கணக்கீட்டின் படி நிலப்பகுதி பனி சுமார் 400 பில்லியன் டன்கள் உருகியுள்ளன என்று விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நிலப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய அளவிலான பனி உருகுதலால் கடந்த 5 ஆண்டுகளில் கடல் மட்டம் 1/5 அங்குலம் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடல்பகுதி பனி உருகுதலும் அதிகரித்து வருகிறது, இந்த நிலவரத்தில் எந்தவித முன்னெற்றமும் ஏற்படவில்லை என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆர்க்டிக் பகுதியில் கடல் பனி உருகுதலால் கோடைக்காலங்களில் கடல் நீர் அதிக வெப்பத்தை உறிஞ்சும், ஏனெனில் வெப்பத்தை வாங்கி மீண்டும் வெளியேற்ற வெண்பனி அங்கு இல்லை என்பதே. இதனால் கோடைக் காலங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.

கொலராடோவில் உள்ள பனி அளவு ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி ஜூலியன் ஸ்ட்ரோவ் இது பற்றி கூறுகையில், "பனி உருகுதலின் வேகம் ஆய்வாளர்களின் அனுமாணத்தையும் தாண்டியதாக உள்ளது" என்கிறார்.

சைபீரியாவின் கடல் பகுதியை ஆய்வு செய்து வரும் மற்றொரு விஞ்ஞானி அகோர் செமிலிடோவ் கிழக்கு சைபீரைய கடல், லாப்டேவ் கடல் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மீத்தேன் வெப்ப வாயுப் படிவுகள் கடல் மேல் மட்டத்திற்கு வருவதாகக் கூறுகிறார். இதனாலும் புவி வெப்பமடைதல் அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்