வெப்ப மயமாதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை அளிக்க இந்தியா கோரிக்கை!
புதன், 29 அக்டோபர் 2008 (17:24 IST)
புவி வெப்பமடைதலுக்கான காரணங்களில் வளரும் நாடுகளின் பங்கு அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டிய இந்தியா, கரியமில வாயு உள்ளிட்ட பிற வெப்ப வாயுக்கள் வெளியேற்றத்தை வளர்ந்த நாடுகள் கட்டுப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
ஐ. நா. பேரவையின் பொருளாதார மற்றும் நிதிக் குழுவில் இந்திய நாடாளு மன்ற உறுப்பினர் ராஜீவ் ஷுக்லா உரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.
உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களை வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் வழங்கவேண்டும் என்றும் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
அதாவது வளர்ச்சி குறிக்த அணுகுமுறையில் 3 தூண்களாக கருதப்படும் பொருளாதார வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை நிறைவேற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை அவர் தனது உரையில் வலியுறுத்திப் பேசினார்.
"இத்தகைய அணுகுமுறையே வளர்ச்சி இலக்குகளை எட்டுவதை உறுதி செய்யும், குறிப்பாக வறுமையையும், பட்டிணியை ஒழித்தல் என்ற லட்சியம் நிறைவேறும்" என்றார் ராஜீவ் ஷுக்லா.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவின் எரிசக்தி திறன் சிறப்பாக உள்ளது, இந்தியா தனது வளர்ச்சிப்பாதைகளை விட்டுக் கொடுக்காமல் இருக்கும் போதிலும் வெப்ப வாயு வெளியேற்றத்தில் வளர்ந்த நாடுகளை விடவும் கட்டுப்பாடுடன் செயல்பட்டு வருகிறது என்றார்.
வெப்ப வாயு வெளியேற்றத்தை குறைப்பதில் வளரும் நாடுகளுகு வரலாற்று ரீதியான பொறுப்புகள் உள்ளது என்பதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வளர்ந்த நாடுகள் வெப்ப வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் மேலும் ஆழமான அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என்பதுடன், வளரும் நாடுகளுக்கு நிதி உதவிகளையும் தொடரவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.