சுற்றுச்சூழல்: ஜார்ஜ் புஷ்சின் கொடூர நகைச்சுவை!

செவ்வாய், 15 ஜூலை 2008 (18:02 IST)
webdunia photoWD
ஜப்பானில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜி- 8 உச்சி மாநாட்டில் வளரும் நாடுகள் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்து, புவி வெப்பமடைதலை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளன.

அது எவ்வளவு சீரியசாக நடைபெற்றிருக்கும் என்பதற்கு உதாரணமாக, புஷ் அன்று நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டு கூறிய ஒரு வரியையே நாம் எடுத்துக் கொள்ளலாம்!

இந்த விவாதங்களின் முடிவை ஐ.நா. ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜி- 8 உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கொடூரமான நகைச்சுவை ஒன்றை உதிர்த்துள்ளார்: "உலகின் மிகப்பெரிய மாசு உற்பத்தியாளன் விடைபெறுகிறேன்" ("Goodbye from the wold's biggest polluter") என்று கூறி ஜோக் அடிக்கிறேன் பேர்வழி என்று உளறி அங்கிருந்த மற்ற நாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இது அடுத்த நாளே பத்திரிக்கைகளில் வெளிவந்து புஷ்சின் இந்த கோணங்கிப் பேச்சு கடும் விமர்சனத்துக்குள்ளாகியது. அதோடு மட்டுமல்லாமல் கைவிரல்களை மூடி காற்றில் ஒரு குத்து வேறு விட்டாராம் உலகின் பணக்கார நாடான அமெரிக்காவின் அதிபர் ஜார்ஜ் புஷ்.

இதைக் கண்ட அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவர் பத்திரிக்கைகளிடம் தெரிவிக்கையில் "மாசுக்கட்டுப்பாட்டிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அமெரிக்காவின் நிலையை அவர் இவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது என்று அங்குள்ள மற்ற தலைவர்கள் அதிர்ச்சி தெரிவித்தனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய 3 ரசாயன நிறுவனங்கள், நிலக்கரி தோண்டும் சுரங்கங்கள் ஆகியவற்றை விட ராணுவ தலைமை செயலகமான பென்டகனிலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் மிக அதிகம் என்று சமீபத்தில் வெளியாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பென்டகனிலிருந்து மட்டும் 7,50,000 டன் நச்சு வாயு வெளியேறுவதாக அதிகார பூர்வ தகவல்களே தெரிவிக்கின்றன. அங்குள்ள சுற்றுச்சூழல் விதிகளுக்கு பென்டகன் அப்பாற்பட்டது. இதனால் இவை கண்டு கொள்ளப்படுவதில்லை.

அமெரி‌க்காவில் ராணுவத் தடவாளங்கள் உற்பத்தி செய்யப்படும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளிலிருந்து "பெர்குளோரேட்" என்ற ஒரு நச்சு வாயு வெளியாகிறது. ராக்கெட் ஏவ பயன்படும் எரிபொருளில் இந்த ரசாயனம் முக்கிய துணைப்பொருள்.


அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, 35 மாநிலங்களில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் வளங்களில் இந்த பெர்குளோரேட் ரசாயனம் கலந்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் நோய் தடுப்பு மையங்கள் மற்றும் பிற ஆ‌ய்வுகளும் இந்த ரசாயனம் உணவுப் பொருளிலும் கலந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் ஒவ்வொரு அமெரிக்கரின் உடலிலும் ஒரு குறிப்பிட்ட அளவு பெர்குளோரேட் நச்சு கலந்துள்ளது.

சுமார் 2 கோடி பேருக்கு குடிநீர் வழங்கும் கொலராடோ நதி நீரில் இந்த பெர்குளோரேட் ரசாயனத்தின் அளவு அதிகமாகியிருப்பதாக சுற்றுச்சூழல் முகமை எச்சரித்துள்ளது.

ஆனால் புஷ் பதவியேற்ற பிறகு ராணுவ பட்ஜெட் பல மடங்கு அதிகரித்துள்ளது. ராணுவத் திறன் அதிகரிப்பு என்ற கொள்கையை வைத்து கொண்டு சுற்றுச்சூழல் விதிகளை புஷ் அரசு மீறி வருவதாக அங்கு பத்திரிக்கைகளில் எழுதி வரும் சுற்றுச்சூழல் நலம் விரும்பிகள் பலர் தெரிவிக்கின்றனர்.

சுமார் 50 மில்லியன் ஏக்கர்கள் ராணுவத் தளவாடப் புழக்கங்களுக்காகவே அமெரிக்கா பயன்படுத்தி வருகிறதாம். நச்சு வெடிகுண்டுகளின் மிச்சம் மீதி, வெடிக்காத குண்டுகளின் சிதறல்கள், பூமிக்குள் புதைக்கப்படும் கடுமையான நச்சுப் பொருட்கள், எரிபொருள் பதுக்கிடம், ராக்கெட் எரிபொருள் ஆகியவை அமெரிக்க சுற்றுச்சூழல் வரலாற்றில் ஒரு பயங்கர அத்தியாயத்தை எழுதவுள்ளது என்று சுற்றுச்சூழல் பதுகாப்பு முகமை எச்சரித்துள்ளது.

இந்த ராணுவப் புழக்கம் இருக்கும் 50 மில்லியன் ஏக்கர் பகுதிகளிலும் நிலத்தடி நீர், குடி நீர் ஆகியவை "பெர்குளோரேட்" ரசாயனத்தால் பாதிப்படைந்து வருவதாக அங்கு பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது.

ஆனால் புஷ் அரசு மட்டுமல்ல அவருக்கு முந்தைய கிளின்டன் அரசும் இதற்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

webdunia photoWD
இந்நிலையில் தன் சொந்த நாட்டு மக்களின் சுகாதாரத்தையே கண்டு கொள்ளாத புஷ் அரசு உலக சுற்றுச்சூழல் நல வாழ்விற்கா பங்களித்து விடப்போகிறது? அதனால்தான் அவர் இந்தியாவையும் சீனாவையும் குறை கூறி "குட் பை ஃபிரம் வேர்ல்ட்ஸ் கிரேட்டஸ்ட் பொல்யூட்டர்" என்று அச்சுப்பிச்சு ஜோக்கையும் அடிக்க முடிகிறது.