பேரிடர் மேலாண்மைப் பணியில் இளைஞர்கள்: கேரள அரசு திட்டம்!
புதன், 13 பிப்ரவரி 2008 (12:03 IST)
பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு பயிற்சி மையம் அமைக்க உள்ளதாகவும், இப்பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கேரள மாநில வருவாய் துறை அமைச்சர் கே.பி.இராஜேந்திரன் தெரிவித்தார்.
இது குறித்துத் திருவனந்தபுரத்தில் நடந்த பேரிடர் மேலாண்மைத் திட்டக் கருத்தரங்கில் அவர் பேசுகையில், அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் பேரிடர் மேலாண்மைக் கொள்கையை அரசு தாக்கல் செய்ய உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டங்களின் இயற்கை அமைப்புக்கு ஏற்றவாறு தனித்தனி பேரிடர் மேலாண்மைக் கொள்கைகள் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரிடர் மேலாண்மை தொடர்பான திறந்தநிலை கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, இயற்கை சீற்றங்கள் பற்றிய தகவல்கள் அனுப்பப்படுவதுடன், உரிய நேரத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
மேலும், இப்பணிகளை மேற்கொள்ள இதுவரை ரூ2.5 கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளதாகத் தெரிவித்த அவர், மாநில இளைஞர் நல வாரியம் உருவாக்கியுள்ள யுவகர்மா சேனா உறுப்பினர்கள் பேரிடர் மேலாண்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.