புவி வெப்பமடைதலைத் தடுக்க கார்பன் டை ஆக்ஸைட் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி வருவதாக்க் கூறிக்கொள்ளும் முன்னேறிய நாடுகள், அப்படிபட்ட தொழிற்சாலைகளை முன்னேறிவரும் நாடுகளில் துவக்கி, உற்பத்தியை மட்டும் பெற்றுக்கொண்டு தூய்மை வேடம் போடுகின்றன என்று ஐ.நா.சாடியுள்ளது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவரும் 8 வது நீடித்த வளர்ச்சி மேம்பாட்டு மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் வானிலை மாற்றத்திற்கான திட்டப்பணி உடன்படிக்கை அமைப்பின் தலைமைச் செயலர் யுவோ டி போயர், யு.என்.ஐ. செய்தியாளருக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
புவி வெப்பமடைதலால் ஏற்பட்டுவரும் வானிலை மாற்றம் சுற்றுச் சூழலில் ஏற்படுத்தும் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை இந்த அமைப்புதான் வகுத்துத் தருகிறது.
“தங்கள் நாட்டில் இயங்கிவந்த கார்பனைக் க்ககும் தொழிற்சாலைகள் அனைத்தையும் முன்னேறிவரும் மூன்றாம் நாடுகளுக்கு துரத்திவிட்டன. ஆனால், அப்படிப்பட்ட தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகின்றன. இதன்மூலம் சுற்றுச் சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து தங்களை காத்துக் கொள்கின்றன” என்று யுவோ டி போயர் கூறியுள்ளார்.
கார்பன் வெளியேற்றத்தினால் முன்னேறியுள்ள நாடுகளின் வளர்ச்சி தடைபடவில்லை என்று கருதக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னேறிய நாடுகள் செய்த்ததைப் போல முன்னேறிவரும் நாடுகளும் அதே தவறைச் செய்யக்கூடாது என்று கூறிய யுவோ டி போயர், முன்னேறிய நாடுகள் சாதித்துள்ள வாழ்க்கைத் தரத்தை இந்தியா உள்ளிட்ட மூன்றாம் நாடுகள் எட்டவேண்டும் என்றும், அதற்கு உதவும் வகையில் மூன்றாம் உலக நாடுகளுக்கு தூய தொழில்நுட்பத்தையளித்து முன்னேறிய நாடுகள் உதவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சுற்றுச் சூழலைக் காக்கவும், உலக வெப்பமடைதலைத் தடுக்கவும் தூய தொழில்நுட்பத்தை வழங்குவது, அதற்கான நிதி உதவியைச் செய்வது ஆகிய இரண்டும்தான் 2009 ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் பேசப்படும் என்று யுவோ கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசும்போது இதுகுறித்து தான் விவாதிக்கப்போவதாகவும் கூறினார்.
புவி வெப்பமடைதலைத் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு மிக மிக அவசியம் என்று தான் அனைத்து நாடுகளையும் வலியுறுத்தி வருவதாக யுவோ கூறினார்.