பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண் பேராசிரியருக்கு தொடர்ந்து அநீதி இழைக்கும் லயோலா கல்லூரி

புதன், 5 மார்ச் 2014 (11:36 IST)
சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்து, கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ராஜராஜனால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி, தற்போது கல்லூரி நிர்வாகத்தால் வஞ்சிக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ஜோஸ்ஃபின் ஜெயசாந்தி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த கண்ணீர் பேட்டி.
FILE

என்னுடைய பெயர் ஜோஸ்ஃபின் ஜெயசாந்தி. நான் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சென்னை லயோலா கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2008ஆம் ஆண்டு முனைவர் சி.அ.இராஜராஜன் தமிழ்த்துறையில் தலைவராகப் பொறுப்பேற்றார். அவர் தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்தேபலர் முன்னிலையில் அவமானப்படுத்துவது, விடுப்பு விண்ணப்பத்தை முகத்தில் தூக்கியெறிந்து கேவலமாகப் பேசுவது என்று செயல்பட்டார்.

அவரது மனித உரிமை மீறல் செயல்களின் உள்நோக்கம் என்னவென்று அப்போது எனக்குத் தெரியவில்லை. என்னைத் தொடர்ந்து இழிவுபடுத்தியதால் பேராசிரியர் சி.அ.இராஜராஜனுடைய மேற்சொன்ன செயல்களைக் குறிப்பிட்டு 28.07.2008 அன்று அப்போதைய கல்லூரி முதல்வர் Fr.ஆல்பர்ட் முத்துமாலை அவர்களிடம் எனது இராஜினாமா கடிதத்தைக் கொடுத்தேன். அவர் இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்து, எனது பணியைத் தொடர கேட்டுக்கொண்டார். அதன் பிறகும் பேராசிரியர் சி.அ.இராஜராஜன் தொடர்ந்து எனக்கு பாலியல் வன்கொடுமைகளை இழைத்து என்னைத் துன்புறுத்தினார்.

2008 ஆம் ஆண்டு எனக்கு வழங்கப்படவிருந்த பணி நிரந்த நியமனத்தை ரத்து செய்ய வைத்து, அதன்மூலம் என்னை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரிடம் ஆய்வு மாணவியாக சேரும்படி வற்புறுத்தியதுடன் லாட்ஜில் வந்து தங்கும்படியும், கேவலமாகப் பேசினார். துறையில் எனக்கு வழங்கிய இடத்தை மாற்றி அவருடைய அறையிலேயே அமர வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தினார்.

மேலும், ‘புருஷன் இல்லாம காய்ஞ்சு போய் கிடக்கிற. என் ஆசைக்கு இணங்கிவிடு’ என்றும், பலர் முன்னிலையில், ‘உன்னோட உடம்பில ஒரு ஓட்டை இருக்குது. அதை அடைப்பது எப்படின்னும் எனக்குத் தெரியும்’ என்றும் ஆபாசமாகப் பேசினார். அவருடைய விருப்பத்திற்கு அடிபணிய மறுத்ததால் நான் வகுப்புக்குச் செல்வதில்லை என்றும் ஒழுங்காக வேலை செய்வதில்லையென்றும் நிர்வாகத்திடம் பல பொய்யான புகார்களைக் கொடுத்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். இவருடைய மிரட்டல் செயல்களுக்கு தமிழ்த்துறையில் பணிபுரியும் பேராசிரியர் அ.பிரின்ஸ் என்பவரும் தொடக்கத்திலிருந்தே உடந்தையாகச் செயல்பட்டு வருகிறார்.

தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியை பணி ஆற்றியதோடு, சைஃப் (SIFE - Students in Free Enterprise) என்ற உலக அளவிலான கல்லூரி அமைப்பிற்கும், மே 2011 வரை பொறுப்பாளராகவும் நான் இருந்ததால், அதற்கென்று தனியாக எனக்கு அலுவல் அறை வழங்கப்பட்டிருந்தது. கல்லூரி கேன்டீனிற்கு மேல், சற்று ஒதுக்குப்புறமாக இருக்கின்ற அந்த அறைக்கே வந்து பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதனால், ஒரு முறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
FILE

பேராசிரியர் சி.அ.இராஜராஜனுடைய பாலியல் வன்கொடுமைகள் அதிகமானதால் 14.12.2012 அன்று கல்லூரியின் ஆட்சிமன்றக் குழுவால் 2012 - 2013 கல்வியாண்டிற்கு என்று நியமிக்கப்பட்டிருந்த பாலியல் வன்கொடுமை விசாரணைக் குழுவிடம் புகார் அளித்தேன்.

18.12.2012 அன்று சி.அ.இராஜராஜன் என் நடத்தையைக் களங்கப்படுத்தும் விதத்தில் என்னைப் பற்றி மிகக் கேவலமான, பொய்யான 60 அவதூறுகளை கைப்பட எழுதி, கல்லூரிக்குள்ளும் வெளியிலும் விநியோகம் செய்தார். இந்த முறையற்ற செயல் மீதும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விசாரணையைத் தடுப்பதற்கு பேராசிரியர் சி.அ.இராஜராஜன் விருப்பப்படி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக, பேராசிரியர் சி.அ.இராஜராஜன் பரிந்துரைக்கும் ஆட்களையும் உள்ளடக்கி ஒரு புதிய விசாரணைக் குழு அமைக்க முயற்சி செய்தார்கள். அதை ஏற்க முடியாது என்று என்னுடைய நியாயமான மறுப்பைப் பதிவு செய்தேன்.

விசாகா வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை விசாரிக்கும் முறையான குழுவே என்னுடைய புகாரை விசாரிக்க வேண்டுமா என சட்ட ரீதியான கருத்து கேட்பதற்காக நிர்வாகம் அதனை வழக்கறிஞருக்கு அனுப்பி வைத்தது. இத்தகவலை 18.2.2013 அன்று அப்போதைய கல்லூரி முதல்வர் Fr.போனிஃபஸ் ஜெயராஜ் அவர்கள், மின்னஞ்சலில் எனக்குத் தெரிவித்தார். வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தின் விசாகா வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட அந்தக் குழுவே என் புகாரை விசாரிக்க வேண்டும் என அவர் உறுதிப்படுத்தினார்.

அதன் பிறகும், தற்போது முதல்வராக இருக்கும் Fr.ஜோசஃப் ஆண்டனிசாமி தலைமையில், 22.2.2013 அன்று புகாரைத் திரும்பப் பெறுமாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விசாரணையை முடக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
FILE

என்னுடைய தொடர் போராட்டத்திற்குப் பிறகு, 19.3.2013 அன்று அக்குழு என் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. அதன் பிறகு, என்-சார்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டார்கள்.

23.4.2013 அன்று பாலியல் வன்கொடுமை தடுப்பிற்கான குழு விசாரணை அறிக்கையை அப்போதைய கல்லூரி முதல்வரிடம் அளித்தது. தான் பணி ஓய்வு பெற்று செல்வதால், புதிய முதல்வர் அந்த அறிக்கையின் அடிப்படையிலும், மதுரை மறை மாநில இயேசு சபை தலைவர் வழிகாட்டுதலின்படியும் நடவடிக்கை எடுப்பார் என உறுதி கூறினார்.

அடுத்த கல்வியாண்டிற்கு, புதிய முதல்வர் Fr.ஜோசஃப் ஆண்டனிசாமி முதல்வராகப் பதவியேற்ற பிறகு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், லயோலா கல்லூரியை நடத்திவரும் இயேசு சபையின் மதுரை மறை மாநில தலைவர் Fr.L.செபஸ்டிராஜ் மற்றும் எட்வர்ட் முடவசேரி, Jesuit Provincial of South Asia, அவர்களுக்கும் 3.7.2013 அன்று விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன்.

அதன் பிறகு Fr.L.செபஸ்டிராஜ் அவர்களை 18.7.2013 அன்று நேரிலும் சந்தித்து முறையிட்டேன். அப்போது அவர் தனக்கும் பாலியல் வன்கொடுமை விசாரணைக் குழுவின் அறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும், என்னுடைய புகாருக்கான எந்த முகாந்திரமும் அதில் இல்லை எனவும் அதிர்ச்சித் தகவலை தெரிவித்தார். அவரிடம் விளக்கமாகப் பேசிய பிறகே, பேராசிரியர் சி.அ.இராஜராஜன், பேராசிரியர் அ.பிரின்ஸ் - இருவரும் ஊழல் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மட்டுமே அவருக்கு அனுப்பப்பட்டு உண்மையை மறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரிய வந்தது. எனவே,

பாலியல் வன்கொடுமை விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் மற்றும் விசாரணை நடத்தப்பட்ட விவரங்களையும் கூறி, இரண்டு விசாரணைக் குழுக்களும் வேறு, வேறு என்பதைத் தெளிவுபடுத்தி, 22.7.2013 அன்று மின்னஞ்சலும் அனுப்பி வைத்தேன். இயேசு சபை நிறுவனரான புனித இக்னேஷியசின் திருநாளான 31.7.2013-ஆம் தேதிக்குள் நீதியைப் போதிக்கும் இயேசு சபையின் கல்லூரியில் எனக்கு நியாயம் கிடைக்க வழி செய்யுமாறு கோரிக்கையும் வைத்திருந்தேன்.

அதன் பிறகும் எந்த சிறு நடவடிக்கையும் இல்லாத நிலையில், கல்லூரி முதல்வர், எனக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை பற்றி எந்தத் தகவலும் அறிந்திராத புதிய ஒரு குழுவை நியமித்து, 7.8.2013 அன்று என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தச் செய்தார். பாலியல் வன்கொடுமை குழுவின் அறிக்கை நகல் எனக்குத் தரப்பட வேண்டும். அதன் அடிப்படையில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைத் தவிர, சட்டத்திற்கு புறம்பான எந்த சமரச உடன்பாட்டிற்கும் நான் தயாராக இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினேன்.

ஆகஸ்ட் மாத நடுவில், பேராசிரியர் சி.அ.இராஜரானிடம் விளக்கம் கேட்டு நிர்வாகம் show-cause notice கொடுத்தது. கூடவே இரண்டு மாதங்களுக்கு மருத்துவ விடுப்பும் அளித்தது. மருத்துவ விடுப்பில் சென்ற நிலையிலும் அடிக்கடி கல்லூரிக்கு வந்த சி.அ.இராஜராஜனுடன் பேராசிரியர் அ.பிரின்சும் சேர்ந்து என்னை துன்புறுத்தியதால், கல்லூரி முதல்வரிடம் முறையிட்டேன். எந்த பயனும் இல்லை.

மருத்துவ விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்த சி.அ.இராஜராஜன், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் பேராசிரியர் அ.பிரின்சுடன் சேர்ந்து அதிக அளவிலான கொடுமைகளுக்கும், மன உளைச்சலுக்கும் என்னை ஆளாக்கினார். எனவே, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்றும், விசாரணைக் குழுவின் அறிக்கையை எனக்குத் தர வேண்டும் என்றும் 11.10.2013 அன்று கல்லூரி முதல்வரிடம் கடிதம் கொடுத்தேன். ஆனால், அதன் பிறகும் அறிக்கையின் நகல் எனக்குத் தரப்படவில்லை. தன்னுடைய கையில் அறிக்கையை வைத்துக்கொண்டே நீதிமன்றத்தை அணுகும்படி கல்லூரி முதல்வரே என்னிடம் தெரிவித்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

அதைவிட வருந்தத்தக்க அனுபவம் என்னவென்றால், பேராசிரியர் சி.அ.இராஜராஜனுக்கு விசாரணைக் குழுவின் அறிக்கை வழங்கப்பட்டதோடு, என்னுடைய சாட்சியங்களின் வாக்குமூலங்களும் வழங்கப்பட்டிருந்தன. அதை வைத்து எனக்காக சாட்சி சொன்னவர்களுக்கு அவர் வக்கீல் நோட்டீசும் அனுப்பி இருக்கிறார்.

எந்த நடவடிக்கையும் இல்லாமல் மேலும், மேலும் கொடுமைகளுக்கு நான் ஆளாக்கப்பட்டதால், 27.10.2013 அன்று தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) இணையதளத்தில் என்னுடைய புகாரைப் பதிவு செய்தேன். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு சென்னை மாநகர காவல் துறை இணை ஆணையருக்கு அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

7.1.2014 அன்று CM Cell இணையதளத்திலும் புகார் பதிவு செய்யப்பட்டு காவல்துறை ஆணையருக்கு forward செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி வளாகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமைக்கும், அதன் மேல் நடந்த விசாரணைக்கும் எந்தத் தீர்வும் எட்டப்படாததோடு, குற்றவாளிகளால் கொலை மிரட்டலுக்கு ஆளானதால் 31.12.2013 அன்று சென்னை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் புகார் அளித்தேன்.

என்னுடைய புகார் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு நான் விசாரணைக்கு அழைக்கப்பட்டேன். 6.1.2014 மற்றும் 8.1.2014 ஆகிய இரண்டு நாட்களும் சென்று என்னுடைய புகார் பற்றி விளக்கமாகத் தெரிவித்தேன். 21.1.2014 அன்று கல்லூரிக்கும் வந்து என்னை விசாரித்தார்கள்.ஆனால், FIR பதிவு செய்யப்படவில்லை. அதனால், 27.1.2014 அன்று சென்னை மாநகர காவல் ஆணையரை மீண்டும் சந்தித்து FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தேன்.

அடுத்த சில நாட்களில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாற்றப்படவே, புதிய ஆய்வாளர் என்னுடைய புகார் பற்றி முழு விளக்கம் தருமாறு காவல் நிலையத்திற்கு அழைத்ததால், 19.2.2014 அன்று காவல் நிலையம் சென்று முழு விளக்கம் கொடுத்தேன். உடனே முதல்-தகவல்-அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மீண்டும், மீண்டும் கேட்டுக்கொண்டும், கல்லூரி முதல்வரிடம் விசாரித்துவிட்டு முடிவு செய்வதாகக் கூறினார்கள்.

விசாரணை மேற்கொண்ட மகளிர் காவல்நிலைய புதிய ஆய்வாளரிடம், கல்லூரி நடத்திய விசாரணைக்கு நான் ஒத்துழைக்கவில்லை என்றொரு பொய்யான தகவலை கல்லூரி முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை விசாரணைக் குழுவின் அறிக்கையின் நகலை எனக்கு வழங்குவதற்கும், பணிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கு ஆணையிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் (வழக்கு எண்: WP34958/2013), உச்சக்கட்டமாக, 28.02.2013 அன்று பணி நீக்க உத்தரவை எந்த முன்னறிவிப்புமின்றி நிர்வாகம் எனக்கு வழங்கி, பெரும் அநீதியை இழைத்திருக்கிறது. என்னைப் பணி நீக்கம் செய்வதற்கு எந்தக் காரணமும் அதில் தெரிவிக்கப்படவில்லை. காரணம் சொல்லவேண்டிய அவசியமல்லை என்று வாய்மொழியாக எனக்கு கல்லூரி செயலரால் தெரிவிக்கப்பட்டது. அதை வாங்க மறுத்ததால், பதிவுத் தபாலில் அனுப்பி வைத்துள்ளனர்.

ஒரு கல்லூரி ஆசிரியை என்ற முறையில் எனக்கு வழங்கப்பட்ட எல்லாப் பணிகளையும் நிறைவாகச் செய்திருக்கிறேன். பாடம் நடத்துவது மட்டுமின்றி சைஃப் என்ற மாணவர் அமைப்பின் பொறுப்பாளராக செயல்பட்ட ஐந்து ஆண்டுகளிலும் (2006-2011) மாணவர்களின் வழியாக தமிழ்ச் சமூகத்தில் பல்வேற பயனுள்ள திட்டங்களைச் செயல்படுத்தி இந்திய அளவில் வெற்றி பெறச்செய்து, நியூ யார்க் (2007), லாஸ் ஏஞ்சலஸ் (2010) நகரங்களில் நடைபெற்ற சைஃப் உலகப் போட்டிகளிலும் கல்லூரிக்கு வெற்றி தேடித் தந்து பெருமை சேர்த்திருக்கிறேன்.

துறைத்தலைவர் என்ற பதவியை பயன்படுத்தி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த பேராசிரியர் சி.அ.இராஜராஜன், மற்றும் பேராசிரியர் அ.பிரின்ஸ் இருவர் மீதும் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக 2012ஆம் ஆண்டு இறுதியிலிருந்து 2014 ஆண்டு ிபரவரி வரை விடாமல் போராடிய ஒரே காரணத்திற்காக கல்லூரி நிர்வகத்தால் பழிவாங்கப்பட்டிருக்கிறேன்.

குற்றவாளிகள் கல்லூரி முதல்வராலும் செயலராலும் பாதுகாக்கப்பட்டிருப்பதோடு, பேராசிரியர் அ.பிரின்ஸ், சுயநிதிப் பிரிவிலிருந்து அரசு உதவி பெறும் ஆசிரிய பணிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். குற்றப் பின்னணி உள்ளவருக்கு, வழக்கு நிலுவையில் உள்ளபோது, அரசுப் பணி எப்படி வழங்க முடியும் எனக் கேட்டு, சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளருக்கும், தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயக்குநரகத்திற்கும் 18.12.2013 அன்று புகார்க் கடிதம் அனுப்பியுள்ளேன்.

சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனம் என்பதால் அரசின் பொதுவான விதிமுறைகளைப் பின்பற்றத் தேவையில்லை என்கிற போக்கில் கல்லூரி நிர்வாகம் செயல்படுகிறது. Ahmedabad St.Stephen’s College vs Govt. of Gujarat வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தங்கள் உரிமைகளை mal-administrationக்கு பயன்படுத்த முடியாது எனத் தெளிவாகத் தீர்ப்பளித்திருப்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியமாகிறது.

ஒரு பெண் முதலமைச்சர் ஆளும் தமிழ்நாட்டில், புகழ்பெற்ற கல்வி நிறுவனமான லொயோலா கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி நீதி கேட்ட பெண்ணுக்கு, பணி நீக்கம் என்ற தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. கத்தோலிக்க மதத்தின் தலைவராக இயேசு சபையை சார்ந்தவரான Fr.ஹோர்கே பெர்காக்லியோ, போப் முதலாம் ஃப்ரான்சிசாக பதவிவகிக்கும் நிலையில், சமூக நீதிக்காகப் போராடுவதாக, Social Forum for Justice போன்ற அமைப்புகளை வைத்திருக்கும் இயேசு சபை நிறுவனத்தில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் கௌரவப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இதை நான் என் தனிப்பட்ட பிரச்சனையாகக் கருதவில்லை. சமூகத்தில் பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகளின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்கிறேன். எனவே, துவண்டு போகாமல் இந்திய நீதித் துறை மீதும், பெண் முதல்வர் ஆளும் தமிழக அரசு மீதும் நம்பிக்கை கொண்டு, ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்தினர், அவர்களைப் போலவே சமூக அக்கறை கொண்டவர்களின் ஆதரவுடன் நியாயம் கிடைக்கப் போராட முடிவு செய்திருக்கிறேன்.

எனக்குக் கிடைக்கும் நியாயம் இனி எந்த பெண்ணுக்கும் இதுபோன்ற அநீதி இழைக்கப்படாமல் தடுப்பதற்குக் காரணமாக அமைய வேண்டும் என்பதே என்னுடைய எனது தொடர் போராட்டத்தின் நோக்கம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறேன் என்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜோஸ்ஃபின் ஜெயசாந்தி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்