தொடரும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் கொலைகளுக்குக் காரணம் முஸ்லீம்களா?

திங்கள், 22 ஜூலை 2013 (17:36 IST)
FILE
தமிழ்நாட்டில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கிவிட்டது. முஸ்லீம் தீவிரவாதிகளை ஒடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என்று பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் கூறிவருகின்றனர்.

குற்றத்துக்கு மரண தண்டனையே கூடாது என்பது அறிவார்ந்த சமூகத்தின் கருத்தாக இருக்கும் போது கொலை என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு வன்செயல். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இந்து அமைப்பினர் கொல்லப்படுவது உண்மைதான். ஆனால் அந்தக் கொலைகளுக்கு மத சாயம் பூசி, அரசியல் கொலையாக அடையாளம் காட்டி தமக்கான இந்து மத அடிப்படைவாத அரசியலைக் கட்டியெழுப்ப பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உண்மையில் இந்த கொலைகளுக்குக் காரணம் யார்? எதற்காக செய்தார்கள்?

கோயம்பேடு விட்டல் கொலை - 27.4.2012

சென்னை விருகம்பாக்கம் சாய்நகரை சேர்ந்தவர் விட்டல் (35). இவர் 127வது வட்ட பாரதிய ஜனதா தலைவராக இருந்தார். கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். 27.4.2012 அன்று இரவு கோயம்பேடு மார்க்கெட்டின் பின்புறம் கை துண்டிக்கப்பட்டு உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் விட்டல் பிணமாக கிடந்தார்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சுந்தரபாண்டியன் என்பவருக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை சுந்தரபாண்டியன் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அடிக்கடி விட்டல், சுந்தரபாண்டியன் வீட்டுக்கு சென்று அவர் வீட்டு பெண்களை ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுந்தரபாண்டியன், அவரது அண்ணன் முருகன் மற்றும் நண்பர் கங்காதரன் ஆகியோர் சேர்ந்து விட்டலை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை - 23.10.12

வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல டாக்டர் அரவிந்த் ரெட்டி (38). பாஜக மாநில மருத்துவர் அணி செயலாளராக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த மாதம் 24 ஆம் இரவு 7.30 மணியளவில் பைக்கில் வந்த 3 பேர் அரவிந்த் ரெட்டியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர்.

கொலை நடந்த இடத்தில் ஸ்பிரேயர் பாட்டிலில் தயார் செய்த நாட்டு வெடிகுண்டை போலீசார் பறிமுதல் செய்தனர். உடனே முஸ்லிம் தீவிரவாதிகள்தான் இந்த கொலையை செய்ததாக பந்த் நடத்தினார்கள்.

விசாரணையில் பெண் விவகாரத்தால் கொலை நடந்தது தெரிய வந்தது. இந்த கொலைக்கான சதித்திட்டத்தை குண்டர் சட்டத்தின்கீழ் வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா தீட்டியுள்ளார்.

இந்த கொலையில் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ் (26), பிச்சை பெருமாள் (28), ஓல்டு டவுன் உதயா என்ற உதயகுமார் (28), சின்னா என்ற சந்திரன் (25), அரியூர் ராஜா (எ) ராஜ்குமார் (எ) எம்எல்ஏ ராஜா (32), சோளிங்கர் தரணி என்ற தரணிகுமார் (24) ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் குட்டநம்பு கொலை - 7.7.13

ராமேசுவரத்தைச் சேர்ந்தவர் குட்டநம்பு இந்து முன்னணி ஒன்றிய துணைத் தலைவராக இருந்து வந்தார். சம்பவத்தன்று மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் ரெயில்வே ரோடு பகுதியில் குடிபோதையில் குட்டநம்பு தகராறு செய்ததால் ஊர்மக்கள் கல்லால் அடித்து கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக ராமச்சந்திரன் என்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டிணம் புகழேந்தி கொலை - 05.07.12

நாகப்பட்டிணத்தில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த புகழேந்தி (53), காலை நடைபயணம் சென்ற போது ஆட்டோவில் வந்த 4 மர்ம நபர்களால் வெட்டி படுகொலைச் செய்யப்பட்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது:-
கடந்த 30 ஆண்டுகளாக இந்து மக்களுக்காக போராடி வந்தவர் புகழேந்தி. இவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து போராடியவர். இதனால் இந்த கொலை நடந்ததாக கூறினார்.

ஆனால் போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட புகழேந்தி, கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட அடாவடி செயல்களில் ஈடுபட்டு வந்ததும், சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவர் வீட்டை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து பின்னர் ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது. இவரால் பாதிக்கப்பட்ட முனீஸ்வரன் என்பவர் இந்த கொலையை செய்ததும் தெரியவந்தது. முனீஸ்வரன் சேலம் நீதி மன்றத்தில் சரணடைந்தார்.

பரமக்குடி முருகன் கொலை - 19.3.13

பரமக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கவுன்சிலர் முருகன். இவர் வாஜ்பாய் மன்றத் தலைவராகவும் இருந்து வந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் பைப் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் 6 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக ராஜபாண்டி மற்றும் மனோகரன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

வேலூர் வெள்ளையப்பன் கொலை - 01.07.13

இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வெள்ளையப்பன் சென்ற போது இந்த சம்பவம் நடந்தது. வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் அருகே 4 பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

இது தொடர்பாக ஜூலை 02, 2013 வெளிவந்த ஒரு தினசரி பத்திரிக்கையில் இவ்வாறு செய்தி வந்தது:

"வேலூர், புது பஸ்நிலையம் அருகே இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் (45) மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கொலை நடந்த இடத்தில் கறுப்பு நிற பை கண்டெடுக்கப்பட்டது. அந்த பையில், ஐந்து பைப் வெடிகுண்டுகள் இருந்தன. பேட்டரி இணைக்கப்பட்டிருந்த வெடி குண்டை கொலைக்கு அல்லது தப்பி செல்லும் போது பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பைப் வெடிகுண்டுகள், தென்மாவட்டங்களில் பிரபலம் என்பதால் தென் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்".

ஆடிட்டர் ரமேஷ் கொலை - 19.07.13

சேலம், பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ் கடந்த வெள்ளியன்று இரவு தனது அலுவலக வாசலில் மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். உடனே பாஜகவினர் கடையடைப்பு, சாலை மறியல், பேருந்து உடைப்பில் இறங்கியுள்ளனர்.

பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், மீண்டும் மத பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது. இந்து அமைப்பினர் ஆயுதம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது என்று பேசுகிறார்.

தமிழ்நாட்டில் சமீபகாலமாக வன்முறை, கொலைக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அரசியல் கொலைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன என்பது முற்றிலும் உண்மை. ஆனால் அதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. ஆளும் அதிமுக பிரமுகர்கள் கூட படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மற்ற அரசியல் கட்சிகளெல்லாம் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் பாஜக, இந்து அமைப்பினர் மட்டும் அதை மத பயங்கரவாதம் என்றும், குற்றவாளிகளை தீவிரவாதிகள் என்றும் வர்ணிக்கின்றனர்.

குற்றவாளிகள் பிடிபடாத ஆடிட்டர் ரமேஷ் கொலையைத் தவிர மேற்கண்ட அனைத்து இந்து அமைப்பினரின் கொலையில் ஈடுபட்டவர்கள் இந்து மதத்தை சேர்ந்தாவர்களே!

இப்படியாக பாஜக மற்றும் இந்து முன்னணியினர் உள்ளூர் தகராறின் காரணமாக படுகொலை செய்யப்படும்போது கூட, அதற்கு மதசாயம் பூசி அந்த பழியை முஸ்லீம்கள் மீது போட்டு, பஸ் எரிப்பு, கடையடைப்பு, சாலை மறியல், பந்த் நடத்தி தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். இந்த செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்