கட்சிக்காரர்களை விடுவிக்க காவல் நிலையத்தில் புகுந்த மம்தா!

செவ்வாய், 8 நவம்பர் 2011 (20:02 IST)
சாமி ஊர்வலம் நடத்தி, அதிக சத்தம் போடும் பட்டாசுகளை வெடித்து அராஜகத்தில் ஈடுபட்டதோடு, காவல் துறையினருடனும் மோதியதால் கைது செய்யப்பட்ட தனது கட்சிக்காரர்களை இருவரை காவல் நிலையத்திற்குள்ளே புகுந்த மீட்டுச் சென்றுள்ளார் மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி.

கொல்கட்டா நகரில், சேவா சங்கா எனும் அமைப்பினர் நேற்று மாலை ஜெகத்ஹத்ரி எனும் கடவுளின் சிலையை கடலில் கரைக்க ஊர்வலமாகக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தடை செய்யப்பட்ட அதிகம் சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை கொளுத்தியுள்ளனர். அந்த இடத்தில் சித்தரஞ்சன் புற்று நோய் மருத்துவமனை இருந்ததால், பட்டாசுகளை கொளுத்த வேண்டாம் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர்.

ஆனால் சேவா சங்கத்தினர் கேட்கவில்லை. அது மட்டுமின்றி, பின்னால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்லுமாறும் காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அதையும் அவர்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

பட்டாசு வெடித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், சத்தமாக வாத்தியங்களையும் வாசித்துள்ளனர். அவைகளை நிறுத்துமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. நாங்கள் யார் தெரியுமா? என்று காவல் துறையினரை மிரட்டியும் உள்ளனர்.

இதனால் காவல் துறையினருக்கும், சேவா சங்கத்தினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஊர்வலத்தினர் போவானிபூர் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்கள் தாக்கத் தொடங்கினர். அப்போது அங்கு வந்த பிளேயர்ஸ் கார்னர் எனும் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், அராஜகத்தில் ஈடுபடும் ஊர்வலத்தினரை அடுத்து விரட்டுமாறு காவல் துறையினரை வற்புறுத்தினர். இந்த மோதலில் டஜன் காவலர்கள் காயமடைந்துள்ளனர். அப்படியிருந்தும் பலமான எதிர் நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் தயங்கினர். காரணம் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவரான ஜெகன்நாத் சா, முதல்வர் மம்தா பானர்ஜியின் தம்பியான பப்பான் பானர்ஜியின் அரசியல் நண்பராவார்.

இறுதியில் காவல் துறையினர் ஊர்வலத்தில் வந்த வன்முறை செய்த குமார் சஹா என்பவரையும், மற்றொருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதை கேள்விப்பட்டு உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, அந்த இரண்டு பேரையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்!

இங்கே சட்டப்பேரவை உறுப்பினர்களும், கட்சி பொறுப்பாளர்களும், எப்போதாவது மந்திரியும்தான் இப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு, சட்டத்தை அடிமையாக்குவார்கள். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவே அதற்கு முன்னுதாரணமாக நடந்துகொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்