54% இந்தியர்கள் லஞ்சம் கொடுத்தவர்கள்தான்!

வெள்ளி, 10 டிசம்பர் 2010 (17:13 IST)
ஸ்பெக்ட்ரம், நில ஒதுக்கீடு, காமன்வெல் போட்டி என சகல மட்டத்திலும் அரசியல்வாதிகள் ஒருபுறம் ஊழல்களில் திளைத்துக்கொண்டிருக்க, காரியம் நடக்க கொடுத்து தொலைக்கவேண்டுமே என்ற எண்ணத்தில் கடந்த ஆண்டு மட்டும் 54 % இந்தியர்கள் லஞ்சம் கொடுத்துள்ளதாக திடுக்கிட வைக்கிறது ஆய்வறிக்கை ஒன்று!

ஜெர்மன் தலைநகர் பெர்லினை சேர்ந்த அரசு சாரா அமைப்பான "டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல்' - Transparency International (TI) இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில், கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் நான்கில் ஒருவர் காரியம் நடக்க லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

"சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்" நேற்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் லஞ்ச ஊழல் மிகவும் அதிகரித்துவிட்டதாக பத்து பேரில் ஆறு பேர் உலகம் முழுவதும் கருத்து தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் குறித்து உலகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், கடந்த 12 மாதங்களில் நான்கில் ஒருவர் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர். இவ்வாறு லஞ்சம் கொடுக்கப்பட்டவைகளில் சுகாதாரம் தொடங்கி கல்வி மற்றும் வரித் துறை வரையிலான சேவை நிறுவனங்கள் அடக்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தவர்களில் பெரும்பாலானோர், அதாவது 29 விழுக்காட்டினர், அதிகம் லஞ்சம் வாங்கியவர்களில் காவல்துறையினரே என்று கூறியுள்ளனர்.

2010 ஆம் ஆண்டில் லஞ்சம் கொடுத்துள்ளவர்களில் அதிகம்பேர் ஆப்கானிஸ்தான், கம்போடியா, இந்தியா, ஈராக், லிபேரியா, பாலஸ்தீனம்,செனகெல், சைரா லியோன் மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்தான் என்றும், இந்த நாடுகளில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் மேலே கூறியபடி, 54 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் தங்களது காரியங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக லஞ்சம் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு லஞ்சம் கொடுத்தவர்களில் பாதி பேர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பிரச்சனை வேண்டாம் என்ற நோக்கத்திலும், கால்வாசி பேர் வேலை விரைவாக நடக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

இதில் மிகவும் கவலைப்படத்தக்க விடயம் என்னவெனில், கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் தற்போது இருமடங்காக அதிகரித்துள்ளது என்பதுதான்.

மேலும் நீதித்துறை, பதிவு அலுவலகங்கள், ஓட்டுனர் உரிமம் வழங்குவது போன்ற அனுமதி சேவைகளுக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் கொடுத்த லஞ்சத்தை விட தற்போது மிக அதிகமாக கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளதும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது என்று கூறுகிறது அந்த அந்த அறிக்கை.

அதே சமயம் உலக அளவில் எடுத்துக்கொண்டால் ஆப்ரிக்காவில்தான் மிக அதிகம் பேர் லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த 12 மாதங்களில் அதிகாரிகளுக்குத்தான் தாங்கள் அதிக அளவில் லஞ்சம் கொடுத்துள்ளதாக இந்த ஆய்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தவர்களில் கூறியுள்ளனர்.

ஆப்ரிக்காவை தொடர்ந்து மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்கா நாடுகள் அதிக லஞ்சம் கொடுத்த நாடுகளாக உள்ளன.இங்கு 36 விழு க்காட்டினர் லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

இவற்றுடன் ஒப்பிடுகையில் முன்னாள் சோவியத் குடியரசுகள் 32 விழுக்காடும், தென் அமெரிக்கா 23 விழுக்காடு, பால்கான்ஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் 19 விழுக்காடு, ஆசிய பசிபிக் பிராந்தியம் 11 விழுக்காடு, ஐரோப்பிய யூனியன் மற்றும் வடக்கு அமெரிக்கா ஆகியவை ஐந்து விழுக்காடாகவும் உள்ளன.

லஞ்ச ஊழலுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அதற்கு எதிராக போராட டிசம்பர் 9 ஆம் தேதியை லஞ்ச எதிர்ப்பு தினமாக 2003 ஆம் ஆண்டில் அறிவித்தது ஐ.நா.

ஆனால் வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களை பார்த்தால், அது ஒரு சம்பிரதாய தினமாக போய்விட்டதாகவே தெரிகிறது.

லஞ்சம் வாங்குவது எவ்வளவு குற்றமோ, அதே அளவு குற்றம்தான் கொடுப்பதும் என்பதை உணர்ந்துகொண்டால் இதுபோன்ற சம்பிரதாய தினங்களுக்கு தேவையில்லாமல் போய்விடும்!

வெப்துனியாவைப் படிக்கவும்