பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு பொறுப்பேற்று இரண்டாண்டுகள் முடிந்துள்ள நிலையில், அங்கு மீண்டும் இராணுவ ஆட்சி ஏற்பட்டு தாம் கொல்லப்படலாம் என்ற அச்சம் அதிபர் ஆஸிப் அலி சர்தாரியை ஆட்டி படைப்பதாக தெரியவந்துள்ளது.
1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போருக்கு பின்னர், பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, இராணுவ ஆட்சியை ஏற்படுத்தினார் அப்போது தலைமை இராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப்.
தொடர்ந்து இராணுவம் தனது கையில் இருக்கும் தைரியத்தில், தனக்கு சாதமாக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து, அதிபராகவும் பதவியேற்றுக்கொண்டார்.
இது குறித்து கேள்வி கேட்கத் தொடங்கிய அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சௌத்ரியை பிடித்து சிறையில் அடைத்தார் முஷாரப்.
இதனைத் தொடர்ந்துதான், ஒருவரே இரண்டு பதவியை வகிப்பதா என்று முஷாரப்புக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியது.அதன் பின்னரே இராணுவத் தலைமை தளபதி பதவியை உதறினார் முஷாரப்.
இந்நிலையில் பாகிஸ்தானில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தியதையடுத்து, ஒருவழியாக தேர்தல் நடத்த சம்மதித்து, அதற்கான அறிவிப்பை வெளியிட வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அயல்நாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த முன்னாள் பிரதமர்களான நவாஸ் ஷெரீப் மற்றும் பெனாசிர் பூட்டோ ஆகியோர் நாடு திரும்பினார்கள்.
இதில் பெனாசிர் பூட்டோவுக்கு அடுத்த பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், தொடர்ந்து பல ஆண்டுகள் வெளிநாடுகளில் தங்கியிருந்தாலும் மக்களிடம் அவருக்குள்ள செல்வாக்கு குறையவில்லை என்றும் செய்திகள் வெளியானது.
இது முஷாரப் ஊட்டி வளர்த்த தீவிரவாத குழுக்களுக்கு பிடிக்கமால் போனதாலேயே, தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த அவரை தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர்.
இதனால் மக்களிடம் எழுந்த அனுதாப அலை, மக்களிடம் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு இருந்த ஆதரவை மேலும் அதிகரிக்க வைத்து, தேர்தலில் அக்கட்சியை ஆட்சியில் அமர்த்தியது.
பாகிஸ்தான் அதிபராக பெனாசிரின் கணவர் சர்தாரியே பதவியேற்றுக் கொண்டபோதிலும், பெனாசிரை கொல்ல ஏவியவர்கள் யார் என்பது குறித்து இன்னமும் விசாரணை நீண்டுகொண்டுதான் போகிறது.
இந்நிலையில்தான், தாமும் கொல்லப்படுவோம் என்று அச்சம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சர்தாரி.
இது தொடர்பாக பாகிஸ்தானிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரி அன்னே பாட்டர்சனிடம், " தாம் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சம் உள்ளதாகவும், அவ்வாறு படுகொலை செய்யப்பட்டால் அடுத்த அதிபராக தமது சகோதரி ஃபரையால் தால்பூரை நியமிக்கவேண்டும் என்று தமது மகனிடம் கூறிவிட்டதாகவும்" தெரிவித்துள்ளார்.
இத்தகவல் "விக்கிலீக்ஸ்" இணைய தளம் வெளியிட்டுள்ள ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது.
மேலும் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை பற்றி குறிப்பிட்டுள்ள சர்தாரி, "தாலிபான்களின் பலம் இன்னும் குறையவில்லை. இதனைக் கூறுவதற்காக நான் வருந்துகிறேன்; ஆனாலும் நாம் வெற்றிபெறப்போவதில்லை" என்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேனிடம் கூறியதாகவும் "விக்கிலீக்ஸ்" ஆவணம் தெரிவிக்கிறது.
அத்துடன் பாகிஸ்தானில் மீண்டும் ஒரு இராணுவ புரட்சி ஏற்படலாம் என்றும், இராணுவ தளபதி கியானி தம்மை ஆட்சியிலிருந்து தூக்கி எறிய வாய்ப்புள்ளதாகவும் பிடேனிடம் அச்சம் தெரிவித்துள்ளார் சர்தாரி.
இத்தகவலை பிடேன், பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுனிடம் கடந்த 2009 ஆம் ஆண்டில் சிலியில் நடந்த ஒரு சந்திப்பின்போது பகிர்ந்துகொண்டதாகவும் "விக்கிலீக்ஸ்" தெரிவிக்கிற்து.
ஆக மொத்தத்தில் சர்தாரி உயிர் பயத்தில் உறைந்துபோய் கிடக்கிறார் என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது!