இந்தி மொழி நமது நாட்டின் தேச மொழி என்றும், அதனை மாநில மொழியுடன் அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்க வேண்டும் என்றும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் பேசியுள்ளார்.
FILE
டெல்லியில் நடந்த பள்ளி மேனிலைக் கல்விப் பேரவைக் (Council of Boards of Secondary Education) கூட்டத்தில் இவ்வாறு பேசியுள்ள அமைச்சர் கபில் சிபல், இந்தி மொழியை கற்பதனால் நமது நாட்டு மாணவர் சமுதாயத்தை அது ஒன்றிணைக்கும் என்றும், நமது நாடு அறிவு உற்பத்தியாளராகும் போது இந்தி மொழி இந்தியாவின் பொது மொழி ஆகும் என்றும் கூறியுள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சரின் பேச்சு தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கக் கூடியதாக உள்ளது மட்டுமின்றி, சற்றும் அர்த்தமுடையதாக இல்லை.
இந்தி மொழியை அனைவரும் படிப்பதால் நமது நாட்டு மாணவர் சமுதாயத்தை அது ஒன்றிணைக்கும் என்றால், இப்போது தங்களுடைய தாய் மொழியிலும், ஆங்கிலத்திலும் அவர்கள் கற்று வருவதால் அவர்களிடையே அப்படிப்பட்ட ஒன்றிணைப்பு அல்லது ஒற்றுமை இல்லை என்று கூறுகிறாரா அமைச்சர் கபில் சிபல்? புரியவில்லை.
தங்களுடைய பள்ளிக் கல்வியைத் தாய் மொழியிலும், கல்லூரிப் படிப்பை ஆங்கிலத்திலும் படித்தப் பின்னர் உயர் கல்வி கற்பதற்கு தங்களுடைய மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு சென்று படிக்கும் மாணவர்கள், எவ்வித சிரமுமின்றி மற்ற மாணவர்களோடு ஒன்று கலந்து படிக்கின்றனரே. இதற்குக் காரணம், அவர்கள் தங்கள் தாய் மொழியுடன் சர்வதேச மொழியான ஆங்கிலத்திலும் அவர்கள் படித்துத் தேறுவதினால்தான் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டு்ம்.
இது தென்னகத்திலும், இந்தி மொழி பேசப்படாத மற்ற மாநிலங்களிலும் உள்ள பொதுவான நிலையாகும். இந்தி மொழி பேசப்படும் மாநிலங்களில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் - அவர்கள் பட்டப் படிப்பையும் இந்தியிலேயே கற்றுத் தேர்ந்து - பட்ட மேற்படிப்பிற்கு வரும் போது அது ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் படிப்பதிலும், அவர்கள் ஆங்கில மொழியை பயிலாத காரணத்தினால் மற்றவர்களோடு பழகுவதிலும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
நமது நாட்டில் உயர் கல்வி - அதாவது பட்ட மேற்படிப்பு அனைத்தும் ஆங்கிலத்தில்தான் உள்ளது. எனவே தங்களது தாய் மொழியுடன் ஆங்கிலத்தையும் பள்ளிப் பருவத்திலிருந்தே படிப்பது அவசியமாகிறது. அவர்கள் ஆய்விற்காகவோ அல்லது உயர் பட்டப் படிப்பிற்காகவோ அயல் நாடுகளுக்குச் செல்வதற்கும் ஆங்கில மொழி அவசியமாகிறது.
எனவே நமது நாட்டு மாணவர்கள் இந்தியை கற்றறிந்திருந்தால் மட்டுமே அவர்களுக்குள் ஒன்றிணைவு உருவாகும் என்று கூறுவது அடிப்படையற்ற பேச்சாகும்.
இந்தியாவின் தேச மொழியா இந்தி?
இந்தி மொழியை தேச (நாட்டு) மொழி என்கிறார் அமைச்சர் கபில் சிபல். இவர் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மூத்த வழக்கறிஞ்சர்களில் ஒருவர். இந்திய அரசமைப்புச் சட்டத்தை நன்கு அறிந்திருப்பவர். அப்படிப்பட்டவர் இந்தியாவின் - அதாவது மத்திய அரசின் அலுவலக மொழியாக (Official Language) - இந்தி இருக்கும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 343இல் கூறப்பட்டதை எவவாறு தேச மொழி என்று திரித்துக் கூறுகிறார் என்று தெரியவில்லை.
இந்தியாவின் தேச மொழிகளாக - நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பேசப்படும், மாநில அரசுகளின் அலுவலக மொழியாக உள்ள - 22 மொழிகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளன. அம்மொழிகள் எவை என்பது அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் (Eighth Schedule) குறிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 22 மொழிகளும் நமது நாட்டின் (தேச) மொழிகளாக சம அந்தஸ்த்துடன் குறிக்கப்பட்டுள்ளன என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும். அதனால்தான் ஆங்கிலத்தை முழுமையாக தவிர்த்து விட்டு இந்தி மொழியை மத்திய அரசின் ஒரே அலுவலக மொழியாக மாற்றுவது தொடர்பான பரிந்துரை குறித்துப் பேசும் அரசமைப்புச் சட்டத்தின் 344வது பிரிவு, அதற்கான நாடாளுமன்றக் குழுவில் எட்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாகக் கொண்டு அதற்கானக் குழு அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதெல்லாம் தெரிந்தும், கற்றறிந்தோர் கூடியுள்ள கல்வி அவையில் இந்தியை தேச மொழி என்றும், அதனை மாநில மொழியுடன் கற்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கபில் சிபல் பேசியிருப்பது உள் நோக்கம் கொண்டதாகவே பார்க்கத் தோன்றுகிறது.
அறிவுச் சக்தியை ஒரு மொழியால் மட்டுமே உருவாக்க முடியுமா?
நமது நாடு உலகின் ஒரு அறிவு உற்பத்திச் சக்தியாக (Knowledge Producer) உயரும் காலத்தில் இந்தி நமது நாட்டின் பொது மொழியாகும் என்றும் அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
நமது நாடு அறிவுச் சக்தியாக உயர்வதற்கும், பொது மொழி (Lingua Franca) ஒன்று உருவாவதற்கும் இந்தி மொழிக்கு மட்டும் அப்படி என்ன தனித்த சக்தி உள்ளது?
இந்தியை சிலாகித்துப் பேசும் எவரொருவரும் இந்த கேள்விக்கு பதில் கூறியாக வேண்டும். இன்றைய உலகில் அறிவுத் திறனில் சிறந்து விளங்கும் நாடுகள் என்று எதனை எடுத்துக் கொண்டாலும் அந்த நாடுகள் தங்கள் தாய் மொழியிலேயே (அந்த தேசிய இனத்தின் மொழியிலேயே) ஆய்வு வரை கற்பித்து உயர்ந்துள்ளன.
ஜெர்மனி மொழி இன்றும் அந்நாட்டு மக்கள் மொழியாகவும், பள்ளியில் இருந்து ஆய்வு வரையிலான கல்வி மொழியாகவும் திகழ்கிறது. அந்த நாடு இன்றைய உலகில் தலைசிறந்த ஒரு அறிவு உற்பத்தியாளர்தான்.
அமெரிக்காவிற்கு நிகராக வளர்ந்து வல்லரசாக உயர்ந்த சோவியத் ஒன்றியமும், இன்றைய இரஷ்யாவும் தாய் மொழிக் (இரஷ்ய மொழி) கல்வியில்தான் அந்த உன்னத நிலையை எட்டின.
இரண்டாவது உலகப் போரினால் கடும் பாதிப்பிற்குள்ளான ஜப்பான் இன்றைய உலகின் ஒரு பெரிய அறிவு உற்பத்தியாளர்தான். அது ஜப்பானிய மொழியிலேயே அனைத்தையும் சாதிக்கிறது. சீனத்து நிலையும் இதுதான். வட மற்றும் தென் கொரிய நாடுகளின் வழியும் இப்படியே உள்ளது. பிரான்சில் பேசுவதற்கு ஒரு மொழியும் கற்பதற்கு ஒரு மொழியும் இல்லை. எல்லாமே பிரெஞ்சுதான்.
நமது நாட்டில் மட்டும்தான் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய கல்வி முறையையும், அவர்களின் மொழியையும் அத்யாவசியமான பயிற்று மொழியாக ஏற்றுக் கொண்டு மாரடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதற்கு மாற்று இந்தி மொழியா?
மேற்கூறப்பட்ட நாடுகளில் தங்கள் தேச மொழியிலேயே பேசி வாழ்கின்றனர், படிக்கின்றனர், ஆய்வு செய்கின்றனர். அதே நிலையை நாம் இந்தியாவில் எட்ட வேண்டுமெனில், இங்குள்ள ஒவ்வொரு இனத்தின் தேச மொழியிலேயே கல்வி இருக்க வேண்டும். கல்வியை ஒரு சர்வதேச மொழியில் கற்பது பல அனுகூலங்களைத் தருகிறது என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் பிறந்து வளர்ந்து வாழும் சமூகத்தின் மொழியிலேயே கல்வியும் அமைந்தால் அது சிந்தனைத் திறனிற்கு பெரிதும் உதவும். அதுவே உயர்விற்கும் வழி வகுக்கும்.
சில நாடுகளின் சில மொழிகளை மட்டுமே கூறி இக்கருத்தை வலியுறுத்த நாம் முற்படவில்லை. மாறாக, தாய் மொழிக் கல்வி எந்த அளவிற்கு அறிவித் திறனை பெருக்கக் கூடியது என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நமது நாட்டில் இந்தி அல்லது வேரொரு மொழியை (சிலர் சமஸ்கிருதத்தை வலியுறுத்துவதால் இப்படி குறிப்பிட வேண்டியதாகிறது) இந்நாட்டவர் அனைவருக்கும் கல்வி மொழியாக்குவது எந்தப் பயனையும் தராது.
“தங்கள் தாய் மொழியை நன்றாக படிக்கும் மாணவர்கள் வேரொரு மொழியையும் படிக்க வேண்டும்” என்று கபில் சிபல் கூறியிருப்பதும் ஏற்புடையதன்று. ஏனெனில், அது மாணவருக்கு ஒரு கூடுதல் சுமையாகவே ஆகிவிடும். விருப்பப்பட்டு படிப்பதே முறையான கற்றலிற்கு வழி வகுக்கும், திணிக்கப்படும் எதுவும் இயல்பான மனித மன நிலையால் புறக்கணிக்கப்படும் என்பதை கல்வியாளர்கள் பல முறை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். அதனால்தான் விருப்பபாடத்தை தேர்வு செய்தல் முன்பு 10வது வகுப்பிலும், தற்போது 11ஆம் வகுப்பிலும் சேர்க்கப்படுகிறது.
எனவே அறிவுத் திறன் என்பது அந்தந்த மாணவரின் விருப்பத்தைச் சார்ந்த கல்வியின் மூலமாக கிடைக்கப் பெறுவதுதான் உரத்த சிந்தனைக்கும் அதன் வாய்ப்பட்ட ஆய்வு மன நிலைக்கும் இட்டும் செல்லும். அது தாய் மொழியில் இருந்தால் அந்த மனத் திறன் சிரமமின்றி வளரும்.
எனவே இந்த நாட்டை அறிவு வளம்சார் நாடாக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்பது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை உண்டாக்கி அதன் மூலம் மீண்டும் ஒரு மொழிப் பிரச்சனையை உருவாக்கி அரசியலாக்குவதை விட்டுவிட்டு, தாய் மொழியிலேயே தாங்கள் விரும்பும் கல்வியை தேர்வு செய்து கற்கும் வசதியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
இந்தியாவிற்கு பொது மொழி, உலகத்திற்குப் பொது மொழி என்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத தூரத்தில் உள்ள சாத்தியங்கள். அதற்கான தகுதி பெற்றுள்ளதா இந்தி என்பதெல்லாம் ஆய்விற்குரியது.இன்றைக்கு அதனைப் பேசுவதால் ஒரு பயனும் இல்லை.
இந்த நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு என்பதெல்லாம் தூய பொது நோக்கில்தான் உறுதியாகுமே தவிர, ஒரு மொழியை எல்லோர் மீதும் திணிக்க முற்பட்டால் அதனால் குரோதமும், அதுவே அரசியலாகி அதன் காரணமாக நாட்டின் ஒற்றுமையும்தான் கேள்விக்குறியாகும்.