பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐ.நா.விலிருந்து இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் கண்டித்திருத்திருந்தாலும், நமது நாட்டில் உள்ள இரண்டு கட்சிகள் மிகுந்த மனிதாபிமானத்துடன் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளது மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.
ஒன்று, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க.
இஸ்ரேலின் தென்பகுதியை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் தொடர்ந்து நடத்திய ராக்கெட் தாக்குதலில் சில இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை முதல் ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெருவாரியானவர்கள் ஹமாஸ் இயக்கத்தினர் என்று செய்திகள் கூறினாலும், நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டதையடுத்து இந்தியா அதற்குக் கண்டனம் தெரிவித்தது.
இந்திய அயலுறவு அமைச்சகம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் ‘அதிகப்படியானது’ ‘தேவையற்றது’ என்று கூறியது மட்டுமின்றி, அத்தாக்குதல் ‘கண்டனத்திற்குரியது’ என்று கூறியிருந்தது.
மார்க்சிய கட்சியின் கடுங்கோபம்!
இந்தியா விடுத்த கண்டன அறிக்கை யு.என்.ஐ. உள்ளிட்ட செய்தி நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டாலும், அது பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ பெரிதாக வெளியாகவில்லை.
இந்த நிலையில்தான் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி டெல்லியில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பிருந்தா காரத் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இஸ்ரேலிற்கு எதிராக கடுமையான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இஸ்ரேல் தொடுத்த இத்தாக்குதல் அரச பயங்கரவாதம் (State Terrorism) என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் முழங்கினர்.
PTI
இஸ்ரேல் நடத்திய இத்தாக்குதலை ஏன் இந்தியா கண்டிக்கவில்லை என்று கோபத்துடன் குரல் எழுப்பினார் பிருந்தா காரத். ஆனால் இந்திய அரசின் அயலுறவு அமைச்சகம் அத்தாக்குதலை கண்டித்திருந்தது. அத்தாக்குதல் அதிகப்படியானது, தேவையற்றது, கண்டனத்திற்குரியது என்று அயலுறவு அமைச்சக அறிக்கை கூறியிருந்தது. அது நாளிதழ்களில் பெரிதாக வெளியிடப்படாததால் அல்லது அதனை அறியாததால் பிருந்தா காரத் இப்படி கோபத்துடன் முழங்கியிருக்கலாம்.
எப்படியாக இருந்தாலும் அது வரவேற்கத்தக்கதே. தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலிற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானங்கள் காசா மீது நடத்திய அதிகபட்சமான தாக்குதல்தான். கண்டனத்திற்குரியதுதான்.
ஆனால் இதைவிட மோசமாக நமது நாட்டிற்கு அருகிலுள்ள இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது அந்நாட்டு இராணுவமும், விமானப்படையும் தொடர்ந்து குண்டு வீசி தமிழர்களைக் கொன்று வருகிறதே, அதனை மார்க்சியக் கட்சி கண்டுகொள்ளாதது ஏன்? தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அங்கு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பிறகு வெளியே வந்ததும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் தொடர்பாக தங்களை நிலை வேறு என்று கூறியதும், அதன் பிறகு எல்லா கட்சிகளுடனும் இணைந்து மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்றதற்குப் பிறகு தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக எந்த ஒரு அறிக்கையையும் மார்க்சிய கட்சி வெளியிடவில்லை. எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையும் மத்திய அரசை வலியுறுத்தி நடத்துவுமில்லை.
காசாவின் மீது குண்டு வீசிய இஸ்ரேலின் நடவடிக்கையை அரச பயங்கரவாதம் என்று கண்டித்த மார்க்சியவாதிகளுக்கு, ஈழத்தில் ஒரே ஆண்டில் 700 முறை விமானத் தாக்குதல் நடத்தியுள்ளோம் என்று அந்நாட்டின் இராணுவ பேச்சாளரே கூறிய நிலையிலும், அதனை அரச பயங்கரவாதம் என்று கண்டிக்க மனம் வரவில்லை.
எல்லா பிரச்சனைகளிலும் காங்கிரஸ் கட்சியை வேர் முதல் உச்சிவரை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கட்சி, ஈழப் பிரச்சனையில் மட்டும் அக்கட்சியின் நிலையோடு எல்லா விதத்திலும் ஒத்துப்போகிறது.
வாக்குவங்கி அரசியலே!
இதேபால், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவும் இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் மீது சிறிலங்க அரசின் முப்படைகளும் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து கடந்த அக்டோபரில் அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்ட கூட்டத்தில் கூட பங்கேற்காத ஜெயலலிதா, ஒரே ஒரு அறிக்கை மட்டும் விடுத்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து இல்லை என்பதை பறைசாற்ற, ‘அ.இ.அ.தி.மு.க.விற்கு இப்பிரச்சனையில் வேறுபட்ட நிலை உள்ளது’ என்பதை அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது மட்டுமின்றி, தனது மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் வாயிலாக உறுதி செய்தவர் ஜெயலலிதா. ஆனால் தமிழர்களின் ‘சுய நிர்ணய உரிமையை ஆதரிப்பதாக’ கூறிய ஜெயலலிதா, அம்மக்கள் சிங்கள விமானப்படை குண்டு வீச்சில் சின்னாபின்னமாகி வருவதைக் கண்டித்தோ அல்லது தாக்குதலை நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தியோ ஒரே ஒரு அறிக்கை கூட அளிக்கவில்லை.
ஆனால், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் குண்டு வீசியவுடன் அதனைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார்.
“பாலஸ்தீனத்தில் உள்ள காஸாவில் இஸ்ரேல் நடத்தும் ராணுவ தாக்குதலால் ஆயிரக்கணக்கான (!) அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் உடைமைகளை இழந்துள்ளனர்.
என்னதான் ஆத்திர மூட்டும் செயல் நடந்தாலும் இம்மாதிரி அறிவீனமான ஆயுதத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்க கூடாது. இது இஸ்ரேல் மீது மோசமான எண்ணத்தை சர்வதேச நாடுகளிடம் உருவாக்கி இருக்கிறது.
எந்த ஒரு நாட்டையும் மற்றவர் ரத்தத்தின் மீது நிர்மானிக்க முடியாது. அந்த செயலுக்கு நியாயம் கற்பிக்கவும் முடியாது. எந்த ஒரு மதமும் இதுபோன்று உயிர்களை பறிக்க அனுமதிக்கவில்லை.
இஸ்ரேலின் இந்த மோசமான தாக்குதலையும், அப்பாவி மக்களை கொல்வதையும் இந்திய அரசு கண்டிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உணவு, உடைகள், மருந்து போன்ற நிவாரண பொருட்களையும் இந்தியா அனுப்ப வேண்டும்” என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழர்களிடையே அரசியல் நடத்தி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா என்றாவது இப்படி, “எந்த ஒரு நாட்டையும் மற்றவர் ரத்தத்தின் மீது நிர்மானிக்க முடியாது. அந்த செயலுக்கு நியாயம் கற்பிக்கவும் முடியாது. எந்த ஒரு மதமும் இதுபோன்று உயிர்களை பறிக்க அனுமதிக்கவில்லை” என்று சிங்கள ஆட்சியாளர்களைக் கண்டித்தோ அல்லது புத்த பிக்குகளைக் கண்டித்தோ அறிக்கை விடுத்துள்ளாரா?
இவ்விரு கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் பாலஸ்தீன மக்களின் மீது பாயும் இந்த மனிதாபிமானம் தமிழர்கள் மீது பாயாததது ஏன்? எல்லாம் வாக்கு வங்கி அரசியல்தான். இப்படி ஒரு கண்டன அறிக்கை கொடுத்தாலோ அல்லது ஒரு போராட்டம் நடத்தினாலோ போதும் குளிர்ந்துபோய் வாக்களித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை.
PUTHINAM
இதுவும் ஒரு விதத்தில் மதவாத அரசியல்தான். மறைமுக மதவாதம், அவ்வளவுதான். மனிதாபிமான அடிப்படையில் தான் கண்டிக்கிறோம் என்று இவர்கள் காரணம் கூறலாம். அப்படியானால் எல்லைத் தாண்டி பாயும் அந்த மனிதாபிமானம், பக்கத்து நாட்டில் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கும் தமிழன் மீது பாயாதது ஏனோ?